தமிழக அரசின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டு தோறும் நலவாழ்வு முகாம், கடந்த 2003 முதல் நடத்தப்பட்டுகிறது. இம்முகாம் கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் பவானி ஆற்றுப்படுகையில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் தொடங்க உள் ளது.  பிப்ரவரி 1 ந்  தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இம்முகாமில் தமிழ்நாட்டிலிருந்து 23 யானைகள் கலந்து கொள்ளும்.இதற்காக டிசம்பர் மாதத்திற்கு முன்பாக யானைகள் உள்ள கோயில் நிர்வாக அதிகாரிகளிடம், அதற்கான கடிதம் வழங்கி, தயார் நிலையில் வைத்திருக்க, முகாம் சார்பில் அறிவுறுத்துவார்கள்.இதனை முன்னிட்டு, யானை பாகன், யானையின் உடல் நலனை பற்றி ஆய்வு செய்து, திடமாக உள்ளதா எனவும், சளி போன்ற தொற்று இல்லாமல் உள்ளதா என கோயில் நிர்வாக அதிகாரியிடம் தெரிவிப்பார்.




அதன் பின்னர், உடல் உபாதை இல்லாத யானைகள், லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். நோய்தொற்றுள்ள யானைகளை, கோயிலிலேயே தங்க வைத்து, முகாமில் வழங்கப்படும் இயற்கை உணவுகள், சித்த வைத்திய முறைகளில் வைத்தியம் செய்து, தினந்தோறும் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார்கள். இதனை கால்நடை மருத்துவர், வாரந்தோறும் வந்து, யானையின் நிலையை குறித்து மருத்துவ சிகிச்சையளித்து செல்வார்.இம்முகாமிற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்படும் யானைகளுக்கு கால் நடை அலுவலர்கள் டாக்டர்களின் நேரடி கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை,உடல் எடை பராமரிப்பு, மருத்துவ மூலிகை உணவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. முகாமில் உள்ள யானைகளுக்கு தற்காலிக முகாம் அமைத்து பராமரிக்கப்படவுள்ளது.




இந்நிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களம் என்ற யானை சில ஆண்டுகளாக சளி பிரச்சனை இருந்து வருவதால்,கடந்த 8 ஆண்டுகளாக மங்களம் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவதில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டிலுள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும்,  மருத்துவ கவனம் பெறவும்,  வாய்ப்பளிப்பதற்காகும்.நீலகிரி மலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளைக் குளிக்க வைப்பதற்காக ஷவா்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரமுள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.




யானைகளுக்குப் புத்துணர்வு வழங்கும் முகாமின் செயல்பாடுகளுள் உணவு ஊட்டுதல், உடற்பிடிப்பு அளித்தல், நடைபயிற்சி கொடுத்தல் உட்பட பல பயிற்சிகள் உள்ளன. யானைகளின் எடைக்கு ஏற்ப உணவு வழங்கப்பட்டது. சோறு, கம்பு, பாசிப்பயிறு, உப்பு, புல், வெல்லம் கலந்து உணவு யானைகளுக்கு ஊட்டப்பட்டது. உணவு உருண்டையில் சூரணம் எனப்படும் சீரணத்திற்கான இயற்கை உணவு கலந்து வழங்கினர்.தினமும் காலை, மாலை நேரத்தில் யானைகளுக்கு எளிய நடை பயிற்சி வழங்கப்பட்டது. யானைகளை மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபின் அவற்றிற்குக் குளியல் நடத்தினர். யானைகளை முதலில் ஆற்றில் படுக்கவைப்பர். பின்னர் அவற்றின் தசைகளைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் வகையில் அவற்றிற்கு உடற்பிடிப்பு (massage) அளிக்கப்பட்டது. யானைகளின் உடல் நலன் தொடர்பாகத் தினமும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். கோவில் யானைகள் மக்கள் கூட்டத்தில் வாழ்ந்து பழகியவை. அவற்றிற்கு புத்துணர்வு முகாம் அனுபவம் புதுமையான ஒன்று. முகாமில் இயற்கையான வன சூழ்நிலையில் வசிப்பதால் அவற்றின் மனநிலை நிறைவாக இருக்கும்.




இந்நிலையில், கடந்த பல வருடமாக யானைகள் நல்வாழ்வு முகாம் நடந்து  வந்த நிலையில், இந்தாண்டு நடைபெறுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று காலத்திலும், யானைகள் முகாம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளுடன் நடைபெற்றது. இது போன்ற யானைகளுக்காக நடத்தப்படும் முகாமினால், யானைகளுக்கு மதம் பிடிக்காமலும், பாகனுடனும், மனிதர்களுடன் பழகுவதற்கும் மனம் பக்கவப்படும். யானைகளுடன் கூடி இருப்பதால், யானைகளுக்கு மனதளவில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும் என்றார்.