தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பின்புறம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த நீராழி மண்டபத்தை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூரில் இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பின்புறம் சமுத்திரம் ஏரிக்கரையில் பாழடைந்த பழைமையான கட்டடம் உள்ளது. நீராழி மண்டபம் என அழைக்கப்படும் இந்த மண்டபத்தை ராணி மண்டபம் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் 200 ஆண்டுகளுக்கு முந்தையாக இருக்கலாம் என்றும், மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




ஏறக்குறைய 10,000 சதுர அடி பரப்பளவில் வடகத்திய பாணியில் அழகிய வேலைப்பாடுகளுடன்  கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் தரை தளமும், அதன் கீழே சுரங்க தளமும் காணப்படுகின்றன. புராதன சிறப்புடைய இந்த மண்டபத்தில் புதர்களும், குப்பைகளுமாகக் காணப்படுகிறது. காலப்போக்கில் இந்த மண்டபம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டதால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு, மண்டபமும் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த புராதன மண்டபத்தை மீட்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆடிட்டர் ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 3 மாதங்களுக்கு முன்பு மனு அளித்து வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த மண்டபத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அரசுப் புறம்போக்கு நிலமான இந்த இடத்தை எப்படி தனியார் பட்டாவாக மாற்றப்பட்டது என்பதை விசாரிக்குமாறும், இந்த மண்டபத்தை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்குமாறும் வருவாய்த் துறை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். இதற்கான நடவடிக்கையையும் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.




 இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், சுமார் 200 ஆண்டுகள் பழமையான ராணி மண்டபம், கலை நயத்துடன், கட்டப்பட்டதாகும். பல நுாறு ஆண்டுகள் ஆனாலும் போதுமான பராமரிப்பு இல்லாததால், செடி கொடிகள் மண்டி மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அப்பகுதி விரோதசெயல்கள் நடைபெறும் இடமாக மாறி விட்டது. இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், அதிரடியாக அரசுடமைக்காக்கப்படும் என்று அறிவித்துள்ளதால், பல ஆண்டுகளுக்கு பிறகு புராதன சின்னம் மாவட்ட கலெக்டரால் காப்பாற்றப்பட்டுள்ளது.   இந்த மண்டபத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதுப்பொலிவுடன் மண்டபத்தை சீரமைத்தால், மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்கள், திருவாரூர், நாகை செல்பவர்கள் அனைவரும், இந்த மண்டபத்திற்கு வந்து இளைப்பாறி விட்டு செல்வார்கள். அப்போது எதிரே உள்ள சமுத்திர ஏரியையும் பார்த்து ரசிப்பார்கள்.’




மேலும், இந்த மண்டபத்தின் சுற்றிலும் உள்ள இடங்களை பட்டா கொடுத்தவர்கள், மின்சாரம், வரி செலுத்துவதற்கான ஆணைகளை வழங்கியவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் தஞ்சாவூர் பழமையான புராதன சின்னங்களின் இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. அதனையும் மாவட்ட கலெக்டர், நேர்மையான அதிகாரிகளை கொண்டு கணக்கெடுத்து மீட்டு, அரசுடமையாக்க வேண்டும் என்றார்.