தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
இதில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வேளாண்மைத் துறை அதன் சார்பு துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அலுவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை
இதில் வேளாண்மைத் துறை சார்பில் தற்போது சாகுபடி ஆகி வரும் குறுவை சாகுபடி பரப்பு மற்றும் குறுவைத் தொகுப்பு திட்டம், குறுவைப்பருவத்தில் மாற்றுப்பயிர் சாகுபடி, அரசின் முக்கியத் திட்டமான முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்துதல் குறித்து ஆய்வும் அறிவுரையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. அதில் வேளாண்மைத் துறையில் குறுவை நெல் மற்றும் தோட்டக்கலைப் பயிரில் வாழை . மரவள்ளி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துதல் குறித்து மாவட்டஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் , முன்னோடி வங்கி மேலாளர் , தலைவர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிர் காப்பீட்டு அலுவலர்கள் உட்பட குழுக் கூட்ட உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்திட உரிய தீர்மானங்களும் இயற்றப்பட்டன.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு
மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப், காலதாமதமின்றி விவசாயிகளுக்கு அடங்கல் / விதைப்புச்சான்று வழங்கிடவும், வங்கி மேலாளர் / கூட்டுறவு சங்க செயலாளர்கள் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், பொதுசேவை மையங்களிலும் உரிய கட்டணத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்திட மாவட்ட பொது சேவை ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்க மாவட்ட இயக்கக்குழு தலைவர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2024-25ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் 5356 எக்டர்/எண்கள்/ச.மீ பொருள் இலக்கு மற்றும் ரூ.174.5659 இலட்சம் நிதி இலக்கினை குழுவின் ஒப்புதல் பெறுவதற்காக கூட்டமும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை நபார்டு மூலமாக, மத்திய அரசின் பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் ஆறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நிறுவனங்கள் மதிப்பு கூட்டுதல், வேளாண் விளைப் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.
விவசாய மனுக்கள் மீதான நடவடிக்கை
2024-25ம் ஆண்டிற்கு பிரதான் மந்திரி விவசாய நீர்பாசன திட்டத்தின்கீழ் 200 எக்டர் பொருள் இலக்கு மற்றும் ரூ.100 இலட்சம் நிதி இலக்கினை மாவட்ட குழுவின் அனுமதி பெறுவதற்கு கூட்டம் நடைபெற்றது. மேலும், விவசாய மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப், ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் உதவிஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா, நேர்முக உதவியாளர் விவசாயம் ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.