தஞ்சாவூர்: கர்நாடக அரசிடமும் தமிழக அரசு காவிரி நீரை பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தஞ்சாவூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை வரும் 16ம் தேதி முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபடுவது என்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.
காவிரி உரிமைப் மீட்பு குழு அவசர கூட்டம்
தஞ்சாவூரில் காவிரி உரிமைப் மீட்பு குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் த.மணிமொழியன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன், ஐஜேகே மாவட்டச் செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேட்டூர் திறக்கப்படாததால் நிலங்கள் தரிசாகிறது
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பெ.மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜூன் 12 ம் தேதி திறக்கவேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேட்டூர் அணை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு இதுவரை சொல்லவில்லை.
கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற வேண்டும்
கர்நாடகத்தில் பருவமழை நன்றாக பெய்து தண்ணீர் அங்குள்ள அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் விகிதப்படி நமக்கு உள்ள தண்ணீரை தமிழக அரசு கர்நாடக அரசிடம் கேட்டு பெற வேண்டும். விகிதப்படி முழு அளவு இருந்தால் என்ன கிடைக்குமோ அதுவல்ல. பகுதி அளவு இருந்தால் கூட அதுக்குள்ள விகிதப்படி தண்ணீரை வாங்க வேண்டும். மேட்டூர் அணையை இந்த ஆண்டு பாசனத்துக்கு திறக்காததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து பேரிடர் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
நடுநிலை தவறிய காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையம் என்பது நடுநிலை தவறி இருக்கிறது. நடுநிலையோடு செயல்படவில்லை. அதற்கு கொடுத்த அதிகாரத்தை செயல்படுத்தவில்லை. நடுநிலை தவறிய ஆணையம். அந்த தலைவர் ஹைதர் நடுநிலை தவறிய நபர் என்று நாங்கள் காவிரி உரிமை மீட்புக்குழு நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லுகிறோம். அந்த நபர் கல்லணைக்கு வந்த போது கருப்புக்கொடி காட்டி கைதாகினோம்.
கர்நாடக அரசு அங்கு அணைகள் மட்டுமில்லாது, ஏராளான ஏரிகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு குழுவை நியமித்து அங்குள்ள அணைகளை ஆய்வு செய்யவேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டங்கள் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக, கர்நாடகாவில் உள்ள அணைகளை ஆய்வு செய்த பின் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு
இந்தாண்டு தண்ணீர் இல்லாத காரணத்தால் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியும் கேள்வி குறியாக உள்ளது. மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும் தமிழக அரசு காவிரி நீரை பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இதனை கண்டிக்கும் விதமாக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தஞ்சாவூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை ஜூலை 16ம் தேதி முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவுக்கு ரூ.4 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதை கைவிட்டு, கடந்த காலங்களில் வழங்கியபோது போன்று உரமாக வழங்க வேண்டும்.
குறுவைக்கு பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரி நீர் வராத காரணத்தால் பல கிராமங்களில் விவசாயம் செய்யப்படவில்லை. விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.