தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதியில் சாலைகளிலேயே நிறுத்தப்படும் கார், டூவிலர்களால் ஏற்பட்டு வந்த தொடர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டு அதை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தஞ்சை மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

இவற்றை தவிர்க்க தஞ்சை காந்திஜிசாலை, தென்கீழ் அலங்கத்தில் உள்ள வணிக வளாகம், அண்ணாசாலை ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய கார்கள்

ராஜா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்கு அலங்கம் ஆகிய பகுதிகளில் வங்கிகள், உணவகங்கள், மருந்தகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கார்கள் நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லக்கூடிய நிலை இருந்து வந்தது. மேலும் இந்த வர்த்தக நிறுவனங்களுக்கு டூவீலர்களில் வருபவர்களும் சாலையோரத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறது.

ஹைட்ராலிக் லிப்ட் கார் பார்க்கிங்

இந்நிலையில் தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பான முறையில் செயல்படுத்தி உள்ளார் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்.

ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ராலிக் லேயர் கார் பார்க்கிங் செயல்படுத்துவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தது திறக்கப்பட்டது. மேலும் இதற்காக டெண்டர் விட்டு தற்போது சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. மேலும் இந்த பார்க்கிங் இடத்தில் நூற்றுக்கணக்கான டூவீலர்களை நிறுத்துவதற்கும் தாராளமாக இடவசதி உள்ளது. தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த ராஜா மிராசுதார் சாலை, தெற்கு அலங்கம் பகுதி, பழைய பேருந்து நிலையம் பகுதி ஆகியவற்றில் சாலையோரத்தில் கார்கள், டூவீலர்கள் நிறுத்தி செல்லும் வழக்கம் தடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி

தஞ்சை மாநகரில் மக்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து செய்து வரும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதுதான் சரியான முடிவாக  இருக்கும் என்ற குறிக்கோளாடு செயல்பட்டு வருகிறார் மேயர் சண்.ராமநாதன்.

இந்த ஹைட்ராலிக் லிப்ட் கார் மற்றும் டூவீலர் நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றியும் சிரமம் இல்லாமலும் நடந்து செல்லவும் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சையின் இதயப்பகுதிபோல் விளங்கும் பழைய பேருந்து நிலையப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இங்கு வருபவர்கள் தங்களின் கார்கள், இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதியில் நவீன ஹைட்ராலிக் லிப்ட் கார், டூவீலர் பார்க்கிங் அமைக்கப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை உணர்ந்து அதை முற்றிலுமாக நிறைவேற்றி வரும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளின் படி செயல்பட்டு வருகிறோம் என்றார்.