தஞ்சாவூர்: தஞ்சையில் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சாலையோரங்களில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனை கடைகள் அதிகரித்துள்ளது. இதை மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

Continues below advertisement

பருவமழை தொடங்கியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்கத்திலும், பின்னர் தித்வா புயல் காரணமாக மழை கொட்டியது. இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ள நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

Continues below advertisement

வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால் மழை குறைந்து விடும் என்பார்கள். அதற்கேற்ப மழை குறைந்து தற்போது பனிப்பொழிவு தான் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 3 நாட்களாக பனிப்பொழிவின் காரணமாக கடும் குளிர்நிலவி வருகிறது.

கடும் பனிப்பொழிவு... மக்கள் அவதி

பனிப்பொழிவால் கடும் குளிர் வழக்கமாக கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை கடும் குளிர் இருக்கும். இதனால் இதனை குளிர்காலம் என்பார்கள். பனிப்பொழிவு காரணமாக குளிரும் அதிகஅளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக கடும் குளிர் காலை 9 மணி வரை நீடித்தது

வயல்வெளிகள் காலை 7 மணி வரை தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் நடவு செய்த நெற்பயிர்களிலும் அதிக அளவு பனித்துளிகள் காணப்பட்டன. பனியானது வெண்மேகங்கள் போன்று காணப்பட்டன. இது பொதுமக்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

பனிப்பொழிவால் வாகனம் ஓட்டுவதில் சிரமம்

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி அவர்கள் சென்றனர். இருப்பினும் எதிரே வந்த வாகனங்கள், முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் மெதுவாகவே சென்றன. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன. பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன.

அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து செல்வதை காண முடிந்தது. வெயில் அடிக்கடித்தொடங்கிய பின்னர் குளிர் மெல்ல, மெல்ல விலகியது. மாலை 4 மணிக்கு பிறகு மீண்டும் குளிரத்தொடங்கியது.

ஸ்வெட்டர், மப்ளர் விற்பனை அதிகரிப்பு

கடும் குளிர் காரணமாக மக்கள் இருமல், சளி போன்ற தொந்தரவுகளால் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள். இதனால் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சளி, இருமல் காரணமாக அதிகமானோர் சிகிச்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சாலையோரங்களில் ஸ்வெட்டர், மப்ளர் தற்காலிக கடைகள் அதிக அளவில் முளைத்துள்ளன. அங்கும் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்ோது மழை இல்லாத நிலையில் இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதனால் இரவு 10 மணிக்கு பிறகு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது.