தஞ்சாவூர்: மழை பெய்தால் என்ன? புயல் அடித்தால் என்ன? வெயில், பனி என்று எக்காலமும் பார்க்காமல் வருடம் முழுவதும் நகரை தூய்மையாக்கும் தூய்மைப்பணியாளர்களை மிகவும் சிறப்பாக கௌரவித்து ஆனந்த அழுகையை ஏற்படுத்தி உள்ளனர் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர். இவர்களுக்கு பொதுமக்களும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

Continues below advertisement

புயல், மழை, பனி, வெயில் என்று கால சூழல் எப்படி இருந்தால் என்ன,  நகரின் தூய்மையே எங்களின் கடமை என்று வருடம் முழுவதும் நகரை தூய்மையாக்கி மக்கள் நலத்தை பேணி காத்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் 100அடி நீளத்திற்கு தூய்மை பணியாளர்களுக்கு நன்றி என மாக்கோலமிட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து,  புத்தாடை வழங்கி தூய்மைப்பணியாளர்களை கௌரவப்படுத்தி, பெருமிதம் கொள்ள செய்து அவர்களின் கண்களின் ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டனர் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர். 

Continues below advertisement

உங்கள் தூய்மைப்பணியால் ஊர் என்றும் சுத்தம்... அதனால் எங்களுக்கு வருடமெல்லாம் வசந்தம் என்று புகழுரையுடன் அவர்களை பெருமைப்படுத்தி உள்ளனர். தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் திருவிழா நாட்கள், பண்டிகை காலங்கள், புயல், மழை, பனி என வருடம் முழுவதும் அன்றாட பணியாக நகரை பெருக்கி. குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்து மக்கள் நலனை காத்து வருகின்றனர்.

மார்கழி மாதம் முழுவதும் விதவிதமாக கோலமிட்டு தங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்கும் பெண்கள் மத்தியில், தஞ்சை நாஞ்சிக் கோட்டை சேகர் காலனியில் வசித்து வரும் பெண்கள் தங்களின் தெருவில் 100 அடி நீளத்திற்கு தூய்மை பணியாளர்களுக்கு நன்றி என மாவு கோலமிட்டு தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தி தங்களின் நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதி அறக்கட்டளையினர் செய்தனர்.

கோலமிட்டு பெருமைப்படுத்தியது ஒருபுறம் என்றால் அந்த பகுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை அழைத்து புத்தாடை வழங்கி உங்கள் தூய்மை பணியால் ஊர் என்றும் சுத்தம். அதனால் எங்களுக்கு வருடமெல்லாம் வசந்தம் என கூறி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தது மட்டுமின்றி புத்தாடைகளும் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத தூய்மை பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்து விட்டனர்.

கண்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட மனம் முழுவதும் மகிழ்ச்சியில் அவர்கள் முகம் அப்போதுதான் மலர்ந்த மலர் போல் மலர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து தூய்மைப்பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்களை உயர்த்தி மகிழ்ச்சி அடைய செய்து வருகின்றனர் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர். இதுமட்டுமா? இவர்கள் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி பொதுமக்களுக்கும் கிடைத்துள்ளது. ஹெல்மேட் அணிந்து வருபவர்களுக்கு பரிசு, ஆடைகள், தங்க நாணயம், வெள்ளிக்காசு என்று பல பரிசுகளை அளித்து சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியும் உள்ளனர். தெரிந்து செய்வது சில என்றால் தெரியாமல் ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளனர். முக்கியமாக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விச்செலவுகளுக்கு லட்சக்கணக்கில் உதவிகள் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஜோதி அறக்கட்டளை செயலாளர் ஜோதி அறக்கட்டளையின் சமூக சேவைகளை ஒருங்கிணைத்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தூய்மைப் பணியாளர்கள், மாணவர்கள் போன்றோருக்கு தீபாவளி உதவிகள், கல்வி உதவிகள் மற்றும் இதர மளிகை, காய்கறி உதவிகள் போன்றவற்றை வழங்குவதில் ஜோதி அறக்கட்டளை முக்கிய பங்காற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.