தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்தன. இதையடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து ரவுடிகள் வேட்டை நடைபெற்று வருகிறது.  தஞ்சாவூரில் ரவுடிகள் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மாவட்டம் முழுவதும்,  விடிய, விடிய ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் வேட்டையாடி கைது செய்ய போலீஸ் மேலதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர்.




மேலும், கிராமப்புறங்கள் முதல் நகரப் பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.  தலைமறைவு  ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது.  பிடிப்பட்ட ரவுடிகளிடமிருந்து, ஏராளமான கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




இது குறித்து போலீசார் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து ரவுடிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 84 ரவுடிகளை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பழைய குற்றவாளிகள், கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் உள்பட அனைத்து விதமான ரவுடிகளையும் பிடித்து சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.




தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குற்றவாளிகளை  பாரபட்சம் பார்க்காமல் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்நிலையில், கும்பகோணம் பகுதி பொது மக்கள் நிம்மதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் உள்ளது என அறிவுறுத்தும் வகையில்,  ஸ்ட்ரோமிங் ஆப்ரேசன் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


அப்போது, பொது மக்களுக்கு, போலீசார், தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கும்பகோணம் பாலக்கரையில் காவிரியாற்றின் பாலத்தில் நடுவில் நின்று பைரோடெக் சிக்னல் கார்ட்ரிட்ஜ் எனும் துப்பாக்கி மூலம் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டனர். அப்போது சத்துடன், புகை கிளம்பிய, வானத்தை நோக்கி, சிகப்பு பந்து வடிவில்  சென்று கலர்கலராக விழுந்தது.


இது போல் வெடிப்பது, பொது மக்கள்,காடு போன்ற ஆட்கள் நடமாட்டமில்லாமல் உள்ள பகுதியில், போலீசார் வந்து கொண்டிருக்கின்றோம் என்று எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுத்துவதாகும் என்றார். இந்நிலையில், தஞ்சாவூர் தாலுக்கா, கூடலுார் கிராமம் பகுதியில், 5 பேர் கொண்ட கும்பல், பயங்கரமான ஆயுதங்களுடன் வழிபறி செய்வதற்காக, காத்திருக்கின்றனர் என தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தாலுக்கா போலீசார் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், எஸ்ஐ ராஜ்கமல் மற்றும் போலீசார், அப்பகுதியில் சென்று பார்த்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் 5 பேர் நின்றிருந்தனர்.


அவர்களை பிடித்த விசாரித்த போது, அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள்,உருட்டுகட்டை, இரும்பு குழாய்கள் இருப்பதும், ஜோடியிடனும், தனியார் வரும் ஆண்கள், பெண்களிடம் வழிபறி செய்வதற்காக நின்றிருந்ததது தெரிய வந்தது. இதனையடுத்த அவர்களிடம் விசாரணை செய்த போது, தஞ்சாவூர், பள்ளியக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் சூர்யா (21), இதே பகுதிகளை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் அஜித்குமார் (21), சேகர் மகன் பிரபு (21), கண்ணன் மகன் ரஞ்சித்குமார் (22), செல்வகுமார் மகன் முகேஷ் (23) ஆகியோர் என்பது தெரிய வந்ததையடுத்து, 5 பேரையும் கைது செய்து ,கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.