தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உலக நெல் மாநாட்டில், ஆந்திரா பொன்னிக்கு இணையாகப் புதிய நெல் ரகம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். குமார் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 29 முதன்மை நெல் விஞ்ஞானிகள் தங்களின் ஆராய்ச்சி அனுபவங்களை காணொலி வாயிலாகப் பகிர்ந்து கொள்கின்றனா்.  மேலும், இந்திய அளவில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிறுவன விஞ்ஞானிகள், வேளாண்மை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரை வாயிலாக பதிவு செய்தனர்.



இம்மாநாட்டு தொகுப்புப் புத்தகத்தில் 400க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டு நாள் உலக நெல் மாநாட்டை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். குமார். தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது, பல்கலைக்கழகம் 50 ஆவது ஆண்டை நிறைவுற்று, 51 ஆம் ஆண்டில் தொடங்குவதால் பொன் விழாவாகக் கொண்டாடுகிறோம்.


வேளாண் பல்கலைக்கழகத்தில் நிறைய துறைகள் உள்ளன. இந்தப் பொன் விழா ஆண்டையொட்டி, இத்துறைகள் மூலம் ஆங்காங்கே தேசிய அளவில் அல்லது பன்னாட்டு அளவில் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஆடுதுறையிலுள்ள நெல் ஆராய்ச்சி நிலையம் இந்த நெல்லுக்கான கருத்தரங்கம் நடத்துகிறது. இதில், கிட்டத்தட்ட 350 பேர் பங்கேற்றுள்ளனர். வெளிநாட்டிலிருந்து 30 விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளை அளித்துள்ளனர்.


நெல் நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருள். நெல் உற்பத்தி பெருகிக் கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம், நிலப் பற்றாக்குறை, பருவ மழை தவறி பெய்தல், புதிய நோய்கள், பூச்சிகள் அதிகமாக வருதல் போன்ற பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன. இவை குறித்து இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தில் விவாதித்து, எதிர்காலத்தில் எந்த மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை எப்படி கொள்கை வடிவமாகக் கொடுக்க வேண்டும் போன்ற நோக்கத்துக்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நிச்சயமாக இதன் பலன் நன்றாக வரும்.




ஆந்திரா பொன்னிக்கு இணையாக நாங்கள் புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனைகள் முடித்து தயார் நிலையில் உள்ளது. வருகிற பொங்கல் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தமிழக முதல்வர் மூலம் அறிமுகம் செய்ய உள்ளோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய நெல் ரகத்தில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ரகமாக இது இருக்கும்.


தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் ஆதாரம் மிக மோசமாக உள்ளது. நிலத்தடி நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தினாலும், அதைச் சேமிக்கவும் வேண்டும். மழைகாலத்தில் மழை நீரைச் சேமித்து வைத்தால், நிலத்தடி நீர் ஆதாரம் குறையாது. இச்சூழ்நிலையில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி நெல் விளைச்சல் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. வறட்சியைத் எதிர்கொண்டு வளர வைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


நெல் விளைச்சலில் உலக அளவில் நம் நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. இதை முதலிடத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாழையில் நாம்தான் உலக அளவில் அதிமாகச் சாகுபடி செய்யப்படுகிறது என்றார் குமார்.  தொடக்க விழாவில்  இந்திய வேளாண் ஆய்வுக் கழக இயக்குநர் ஏ.கே. சிங், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, ஆடுதுறை நெல் ஆராய்சி நிறுவன இயக்குநர் வி.அம்பேத்கர் வரவேற்றார். இறுதியாக இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.