குரூப்-4: இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு, வரும் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது. 


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகின.


2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. மீண்டும் தாமதமாக, குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வுப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு 673 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சம்பந்தப்பட்ட பணி நாடுநர்களுக்குக் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு கலந்தாய்வு நடைபெற உள்ளதால், பணிநாடுநர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கலந்தாய்வு நடைபெறும் நாள்


25.09.2023 காலை 8 மணி (முற்பகல்) 


தேர்வாணைய பட்டியல்


1.175 வரையுள்ள பணிநாடுநர்கள்


26.09.2023  காலை 8 மணி (முற்பகல்) 


352-438 மற்றும் 440-526 வரையுள்ள பணிநாடுநர்கள்


25.09.2023 நண்பகல் 12 மணி (பிற்பகல்)


தேர்வாணைய பட்டியல் வரிசை எண் 176-322 வரை மற்றும் 324 351 வரையுள்ள பணிநாடுநர்கள்


26.09.2023 நண்பகல் 12 மணி (பிற்பகல்)
 527-641,643-664 666-667 மற்றும் 669.678 வரையுள்ள பணிநாடுநர்கள்


கலந்தாய்வு நடைபெறும் இடம்


Madras Christian College Boys Higher Secondary School, Chetpet, Chennai-31


நியமன அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட பணிநாடுநரின் விவரங்களைக் கண்டறிந்து பட்டியல் தயார் செய்து, அப்பணிநாடுநர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ள விவரங்களைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும். தங்கள் ஆளுகைக்குட்பட்ட பணிநாடுநர்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.


மேலும் 27.09.2023 அன்று பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதால் அந்நாள் வரை பணிநாடுநர்கள் தங்கள் சொந்த செலவில் தங்கும் வசதி மற்றும் இதர வசதி ஏற்பாடு செய்து கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும்.


மேற்காணும் விவரங்களை அனைத்து பணிநாடுநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதையும் மற்றும் எந்த ஒரு பணிநாடுநரும் விடுபடவில்லை என்பதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.