தஞ்சாவூர்: அப்பல்லாம் அரசு பள்ளின்னா மண்தரை, மரத்தடியில் படிச்சோம். உட்கார கூட பெஞ்ச் கிடையாது. இப்போ எம்புட்டு வசதி. அதிலும் பாடத்தை எவ்வளவு ஈசியா கத்துக்க வைக்கிறாங்க. எக்காலத்திலும் அழிக்க முடியாத செல்வம் என்றால் அது கல்விச்செல்வம்தான்.



அதனை அறுசுவை உணவாக தாயின் அன்புடன் கலந்து ஆரம்ப நிலையிலேயே மாணவ, மாணவிகளுக்கு புகட்டி தன்னம்பிக்கை மலர்களாக சுடர் விட்டு மிளரும் சிகரங்களாக மாற்றி வருகிறது ஒரத்தநாடு அருகே வடசேரி (1) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

வெறும் எழுத்துகளை கற்றுக் கொள்வது கல்வி ஆகாது. அது நல்ல நடத்தையை உருவாக்க வேண்டும். தன் கடமையை தவறாமல், வலுவாக செய்யும் அறிவினை ஊட்டுவதாக அமைய வேண்டும். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்றால் அது கல்விதான். பணமும், சொத்துக்களும் அழித்தாலும், யாராலும் அழிக்க முடியாத பெரும் சொத்து என்றால் கல்வி மட்டுமே. எண்ணையும், எழுத்தையும் கண் என்றார் திருவள்ளுவர். கல்வி என்பது கண் போல. அது மனிதனுக்கு இல்லை என்றால் அவனுக்கு வாழ்வு முழுவதும் இருளாக தான் இருக்கும்.

இதனால்தான் ஆரம்பக்கல்வியிலேயே மாணவ, மாணவிகளை அருமையாக தயார்படுத்தி கல்வியை சிறப்பாக கற்றுத்தந்து அவர்களை செம்மையாக செதுக்கி சிற்பமாக உருவாக்குகின்றனர் இப்பள்ளி ஆசிரியைகள். படிப்பு மட்டுமா? சிலம்பம், பேச்சு, கபாடி என்று இந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் அதகளம் செய்கின்றனர். இளம் மரத்தில் ஆணி அடித்தால் எப்படி நச்சுன்னு பதியுமோ அதேபோல் ஆரம்பத்திலேயே இம்மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், தன்னம்பிக்கையையும் அளித்து தனிசிறப்பு பெற செய்து வருகின்றனர்.





ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ளது வடசேரி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 83 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை கல்வியின் பக்கம் திரும்புவது என்பது மிகுந்த சவால் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. வீட்டிலேயே ஆன்லைன் வகுப்பு முடித்து விளையாட்டு, தூக்கம் என்று இருந்தனர். பின்னர் ஆரம்ப நாட்களில் தினமும் பள்ளிக்கு வருவது என்பது வேப்பங்காய் போல் கசப்புதான் மாணவர்களுக்கு. ஆனால் அதை இனிப்பு மிட்டாயாக மாற்றி இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு எப்போது செல்வோம் என்று துள்ளிக் குதிக்க வைத்து தனியார் பள்ளிக்கு எவ்விதத்திலும் எங்கள் மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை கல்வியிலும், கூடுதல் சிறப்பு தகுதிகளிலும் முன்னேற்றம் அடைய வைத்துள்ளனர் இப்பள்ளி ஆசிரியைகள்.

இங்கு 14 ஆண்டுகளாக  தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் வாசுகி. இடைநிலை ஆசிரியைகளாக ர.சங்கீதா, யோகேஸ்வரி ஆகியோர் 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி மாணவ, மாணவிகள் கராத்தே, கபாடி, சிலம்பம் என்று தனித்திறமைகளை வளர்த்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிக்கோப்பைகளை அள்ளிக் கொண்டு வந்து அசத்துகின்றனர். படிப்பிலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கின்றனர்.
 
இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் அமர்ந்து பாடம் படிக்க சிறிய சேர், வட்ட மேஜை என்று மாணவர்களுக்கு உள்ள வசதிகள் அசத்துகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டிலேயே கவனம் சென்றுள்ளது. ஒருவாரத்தில் அவர்களை கல்வியின் பக்கம் விளையாட்டுடன் இணைத்து நடத்தி இப்போது வெகு உற்சாகமாக பள்ளிக்கு வரவழைத்துள்ளது என்பதே பெரிய சாதனை. இதற்கு பெற்றோர்களும், பொதுமக்களும் அளித்த ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் ஆங்கில வழி, தமிழ் வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சி இப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகின்றனர்.

தனித்திறமைகளில் சாதனை படைக்கின்றனர். இப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து இந்நாள் வரை மாணவ, மாணவிகளின் கல்வியின் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்.ஓ. குடிநீர்தான் குடிக்க வழங்கப்படுகிறது. மதிய உணவு சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் அளிக்கப்படுகிறது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையே மாணவர்கள் மறந்து விடும் அளவிற்கு அவர்களை கல்வியில் ஐக்கியப்படுத்தி உள்ளனர் இப்பள்ளி ஆசிரியைகள். தற்போது இப்பள்ளியில் தலைமை ஆசிரியை, 2 இடைநிலை ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆசிரியை ர.சங்கீதா வாசிப்பை நேசிப்போம்-ல் விருது பெற்ற முதல் இடைநிலை ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவது குறித்து தலைமை ஆசிரியை வாசுகி கூறுகையில், கல்வி என்பது கண் போன்றது. அழியாத செல்வமாகிய கல்வியை பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான் கற்று தரும் ஆசிரியர்களின் எண்ணமாக இருக்கும். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேற்றம் அடைகின்றனர். எங்கள் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று தனித்திறமைகளிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். எங்களின் குழந்தைகளை போல் இவர்களை நாங்கள் கருதுகிறோம் என்றார்.

இப்பள்ளியில் தற்போது தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம் தொகுதி நிதியுதவியில் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சிதறிவிட்ட மாணிக்கங்கள் போல் போட்டி போட்டு கல்வி கற்றும், போட்டிகளில் வென்றும் மாணவ, மாணவிகள் ஒளிர்ந்து வருகின்றனர். பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர் என்பதும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.