தஞ்சாவூர் மாவட்டத்தில்  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 4,77,868 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் குறித்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்  வெளியிட்டு பேசுகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கால அட்டவணையின் படி, தஞ்சாவூர்  மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.


நமது மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் 20 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.தஞ்சாவூர் மாநகராட்சியில் 1,99,506 வாக்காளர்களும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 62,477 வாக்காளர்களும் மற்றும் 20 பேரூராட்சிகளில் 2,15,885 வாக்காளர்களும் என மொத்தம் 4,77,868 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டது என்றார்.




இந்நிகழ்ச்சியில், கூடுதல் வருவாய் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் வளர்ச்சி ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நேர்முக உதவியாளர் மங்கையர்க்கரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.கடந்த நவம்பர் மாதம் முதல் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக முகாம்கள் நடைபெற்றது.  இந்த முகாம்கள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கடந்த நவம்பர் மாதம் 13,14, 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.




இந்த முகாம்களில் ஏராளமான புதிய வாக்காளர்கள் பெயர்களை சேர்த்து கொண்டனர்.  புதியதாக சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்காக கொடுத்த வாக்காளர்களின், படி, அனைத்தும் செய்த பிறகு நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர்கள் பார்வைக்காக வைத்திருப்பார்கள். மேலும், வாக்காளர்கள், தங்களது பெயர்கள்  உள்ளதா என்றும், நீக்கல், திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வைக்கப்படவுள்ளது.  நகர் புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களும், தங்களது பெயர்கள் விடுபடாமல் உள்ளதா, புகைப்படங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.