தஞ்சாவூர்: எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால்தான் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல. 122 எம்எல்ஏக்கள்தான். பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதை விட தூக்கில் தொங்கி விடுவோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Continues below advertisement

தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, எடப்பாடி பழனிசாமியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. 122 எம்எல்ஏக்கள்தான் காப்பாற்றினர்.

இவர்களில் 18 பேர் எடப்பாடி பழனிசாமி சரியில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் எனவும் கூறிதான் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் எனக் கோரவில்லை. இந்நிலையில், நாங்கள் ஆட்சியைக் கலைக்க கோரியதாக எடப்பாடி பழனிசாமி முன்னுக்கு பின் முரணாக பேசுவது, அவர் தோல்வி பயத்தில் உளறுவதாகத் தெரிகிறது. இத்தேர்தலில் உறுதியாக எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார்.

Continues below advertisement

எடப்பாடியுடன் நாங்கள் கூட்டணியில் சேர சான்சே இல்லை. பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பதை விட நாங்கள் தூக்கில் தொங்கி விடுவோம். யூடியூப் சேனல்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. நன்றியை பத்தி பேசுவதற்கு எடப்பாடிக்கு  தகுதி இல்லை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. எடப்பாடி டான் அல்ல. அனைத்து பிரச்னைக்கும் பழனிசாமி தான் காரணம் என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது.

வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, நாம் தமிழர் கட்சி கூட்டணி என 4 கூட்டணிகள் வருவதால், எடப்பாடி பழனிசாமி படுபாதாளத்தில் தள்ளப்படுவார். ஜெயலலிதாவின் கட்சி தோல்வியடைந்தால், அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக ஏற்கெனவே இருந்தது. இக்கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி புதிதாக வந்து சேர்ந்தார். இதை அமமுக எப்படி ஏற்றுக் கொள்ளும்? எங்களுடைய தொண்டர்களும் அவர்களுடன் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி செய்யும் செயல்களே திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. தற்போது நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தவித நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தோம். வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அமமுகவின் நிலைப்பாட்டை டிசம்பர் மாதத்தில் அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.