தஞ்சாவூர்: கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும் கடைசியுமான ஆலோசனை கூட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை கடுமையாக சாடினார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. இது நேற்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்துள்ளது.
தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்திற்கு போதிய நாட்கள் வராததால் ஆத்திரமடைந்த பிரேமலதா விஜயகாந்த் கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும் கடைசியும் கூட்டமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும் என ஆத்திரத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா ஆவேசமாக பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தஞ்சை, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகளவு கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் கடும் கோபத்தில் ஆழ்ந்து விட்டார். பின்னர் அவர் ஆவேசமாக பேசியதாவது:
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றுதான் எங்கள் கொள்கை எங்கள் ஒரே இலக்கு வெற்றி. நாங்கள் எங்கு கூட்டணி அமைக்கிறோமோ அங்கு தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும். துணிந்தவனுக்கு எதுக்கும் பயமில்லை. உலகமே ஒருவரை அன்னதான பிரபு என்று கூறுவது கேப்டன் விஜயகாந்த்தை மட்டும்தான். ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று திட்டத்தை அப்போதே சொன்னவர் நமது கேப்டன்தான்.
டெல்டா மாவட்டத்தில் கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும், கடைசி கூட்டமாக இதுதான் இருக்க வேண்டும். அப்படிதான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தில் 500 பேர் அமர்ந்திருக்கிறீர்கள். மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது திங்கட்கிழமை வேலை இருக்கும் என்பதால் கூட்டத்திற்கு வரவில்லை என்று சொல்கிறார்.
நாங்கள் வேலையில்லாமல் வந்திருக்கிறோமா. வந்தவர்களுக்கு தான் வேலை இல்லையா என கேள்வி கேட்ட அவர் பள்ளி மாணவர்களை போல் உடல்நிலை சரியில்லை விடுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்பது போல் உள்ளது. அழைப்பிதழில் பெயர் இல்லை என்றால் எவ்வளவு கோபப்படுகிறீர்கள்? பெயர் சின்னதாக உள்ளது என்றால் எவ்வளவு கோபப்படுகிறீர்கள் நிர்வாக பொறுப்பு மட்டும் வாங்கிக் கொண்டால் பத்தாது பணியாற்ற வேண்டும் என படபடவென்று ஆவேசத்துடன் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அழைப்பிதழை கையில் எடுத்து பாருங்கள்... எத்தனை பெயர்... எவ்வளவு பெரிய அழைப்பிதழ் ஆனால் இங்குள்ள கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இனிமேல் இப்படி குறைவான கூட்டம் இருக்கக்கூடாது. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது கேப்டனின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டம் முடிந்தவுடன் கலைந்து சென்ற தேமுதிக தொண்டர்கள், கடந்த வாரத்தில் நடக்க இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செஞ்சுட்டாங்க. அன்னைக்கு ஒரு நாள் சம்பளம் போச்சு. வாரத்தின் முதல்நாளில் கூட்டம் வைச்சா... விவசாய கூலி வேலைக்கு போறவங்க என்ன செய்ய முடியும். முதல்நாள் வேலைக்கு போகலைன்னா அடுத்த நாள் வேலைக்கு கூப்பிட மாட்டேன்கிறாங்க. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிங்கிறது இதுதான் போல இருக்கு என்று நொந்து கொண்டே பேசி சென்றதை கேட்க முடிந்தது.