தஞ்சாவூர்: இன்றைய காலக்கட்டத்தில் எல் நினோ என்ற வார்த்தை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. பூமியின் வெப்பத்தை அதிகரிப்பதுதான் எல் நினோ. இதை வருங்கால தலைமுறையினர் கண்டு அஞ்சக்கூடாது என்பதற்காக பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு மரக்கன்று நடுதல், மூலிகைகளின் பயன்களை பற்றி விளக்கி மேம்படுத்தி வருகிறது திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அமைந்துள்ளது திருமங்கலக்கோட்டை கீழையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி, சுற்றுப்புறம், கிராமம் ஆகியவற்றை சுத்தமாக பேணுவதிலும், இயற்கையை பாதுகாப்பதிலும் பல்லுயிரி வளங்களை காப்பதிலும், இயற்கை விவசாயத்தை போற்றுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். அந்தளவிற்கு இப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம் மாணவர்களுக்கு இயற்கையின் உயர்ந்த செல்வம் எது என்று விளக்கம் கொடுத்து இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி உள்ளார். 


இப்பள்ளியில் இயற்கையை பேணுவோம் எதிர்கால சந்ததியினரை காப்போம் என்ற உயரிய நோக்கோடு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம் வழிகாட்டலில் பசுமை படை மாணவர்கள் அனைவரும் இணைந்து பல நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பாதுகாத்து வருகின்றனர். பள்ளியில் வீணாகும் தண்ணீரை குழாய்களின் மூலம் எடுத்துச் சென்று அம் மரங்களுக்கும், மூலிகை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கும் நீர் பாய்ச்சி வருகின்றனர்.


பள்ளி வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கத்தோடு மட்கும் குப்பை, மட்காத குப்பை குழிகளைத் தோண்டி பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி குப்பைகளைப் பிரித்து குழிகளில் போட அறிவுறுத்தி ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வருகின்றனர்.


பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணம் உள்ள செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு சிறு, சிறு முதலுதவிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக தலைவலி நிவாரணி லெமன் கிராஸ் வயிற்று வலி நிவாரணி கற்றாழை, சளி இருமல் நிவாரணி துளசி , ஆடாதோடா போன்றவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமளவில் பயன் தருகிறது. விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மாணவர்கள் மரங்களையும், மூலிகை தோட்டத்தையும் பராமரித்து வருகின்றனர்.


காய்கறி தோட்டங்கள் அமைத்து அதில் வாழை, கத்தரி, தக்காளி, வெண்டைக்காய், கீரை வகைகள் மற்றும் முருங்கை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளை பள்ளியின் மதிய உணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வருவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இயற்கையான முறையில் விளையும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் சத்துணவில் சேர்க்கப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.


தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு இந்த தோட்டத்திற்கு வேலி அமைத்துள்ளனர். வீணான பாட்டில்களை கொண்டு தோட்டத்திற்கு வந்து இரைதேடும் குருவிகள், புறா, கிளி, காகம் போன்றவற்றிற்கு பசியை ஆற்றவும் தாகத்தை தணிக்கவும் பீடிங் ஸ்டேஷன் அமைத்துள்ளனர் இப்பள்ளி பசுமைப்படை மாணவர்கள். மேலும் ஊரில் உள்ள பள்ளிக்கு அருகாமையில் உள்ள நீர் நிலைகளான குளங்களை சுற்றியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கி கால்நடைகள் உண்ணாமல் பாதுகாத்து வருகின்றனர். 


குளக்கரைகளிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமையான சூழலை உருவாக்கி உள்ளனர். விதைப்பந்துகளை செய்து ஆங்காங்கே தூவி வருகின்றனர். பிளாஸ்டிக்கை ஒழித்தல், மரக்கன்றுகள் நடுதல், பாதுகாத்தல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி உள்ளனர். உலக மண் நாள், உலக ஓசோன் தினம், அறிவியல் தினம், காடுகள் தினம், புலிகள் தினம் போன்ற தினங்களை பள்ளிகளில் கொண்டாடி வருகின்றனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியோடு பல்வேறு விழிப்புணர்வு நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர்.


பசுமைப்படை மாணவர்களின் இந்த முயற்சிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி அதற்கு முழு ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறார். ஆசிரியர்கள் கர்ணன், பாலாஜி, சித்தார்த்தன் ஆகியோர் மாணவர்களோடு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர்.