நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ உயர் ரக கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கார் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை, படகில் ஏற்றி கடத்த முயன்ற நாகை, கோவையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் பணிகளில் தனிப்படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுந்தமாவடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கடந்த வாரம் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவடி கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காரில் சோதனை செய்தனர். அந்த காரில் பண்டல், பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் விழுந்தமாவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 45), கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த சிவக்குமார் (47) ஆகியோர் என்பதும், இவர்கள் ஆந்திராவிலிருந்து இருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்ட கஞ்சாவை, விழுந்தமாடி கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ரூ. 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கோடீஸ்வரன், சிவகுமார் ஆகிய இருவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரன், சிவக்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்