தஞ்சாவூர்: அனைத்து பிரிவினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் எதுவும் இல்லாத நிதி நிலை அறிக்கை இது. முக்கியமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் நிதி நிலை அறிக்கை இது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும், மாணவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்குமான நிதிநிலை அறிக்கை என்பதை வரவேற்கிறோம். ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் பத்து வருடமாக மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக போக்குவரத்து கழகங்கள் கடுமையாக சீரழிக்கப்பட்டுள்ளன.
அனைத்து துறைகளிலும் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட போக்குவரத்து, அரசு ஊழியர்,ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த நாலு வருடங்கள் ஆகியும் திமுக அரசு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது, போராடுகின்ற உரிமைகளை பறிக்கக் கூடாது, காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் தொடர்ந்து போராடி வந்த நிலையில், இன்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் இதற்கு தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் நீண்டகாலமாக ஏஐடியூசி தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கையான மெட்ரோ, பேருந்து, ரயில் உள்ளிட்ட மும்முனை பயணங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை கொண்டு வந்திருப்பது வரவேற்பிற்குரியது. புதிய மின்சாதன பேருந்துகள் உள்ளிட்டு மினி பேருந்துகள் அனைத்தையும் போக்குவரத்துக் கழகங்களே இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் தனியாருக்கு வழங்க மாட்டோம் என்பது குறித்த எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பழைய பேருந்துகளை புதுப்பிக்க 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது போதாது. கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வு ஊதியத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் இடம்பெறவில்லை. ஒட்டு மொத்தத்தில் போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வூதியர்கள், அரசு பணியாளர்கள், சத்துணவு செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் எதுவும் இல்லாத நிதி நிலை அறிக்கை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.