தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை பழிக்குப்பழி வாங்கும் செயலாக வெட்டிக் கொன்ற வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருந்தையன் (50). இவர் தினமும் காலையில் தனக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள தோப்பிற்கு செல்வது வழக்கம். அதேபோல் 11ம் தேதி காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று குருந்தையன் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி குருந்தையன் பைக்குடன் கீழே விழுந்துள்ளார். அவர் எழுந்து நிற்க முயற்சி செய்வதற்கு காரில் இருந்து இறங்கிய மர்மகும்பல் குருந்தையனின் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. குருந்தையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.
அப்போது சிலர் தப்பிச் செல்வதை கண்டு பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதற்கிடையில் படுகாயம் அடைந்த குருந்தையன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொதுமக்கள் வல்லம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குருந்தையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குருந்தையன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கடந்த 2013ம் ஆண்டில் உலகநாதன் என்பவரையும், 2014ம் ஆண்டில் உதயா என்பவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். மேற்கண்ட கொலைகளுக்கு பழிதீர்க்கவே தற்போது குருந்தையனை கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
பின்னர் போலீசார் பொதுமக்களிடம் சிக்கிய நபரிடம் விசாரித்த போது அவர் பெயர் வடிவேலு என்பதும், புதுச்சேரி ஆரோவில் ப!குதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் ஏழுப்பட்டியை சேர்ந்த ஒத்தக்கை ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்தது. பொதுமக்கள் தாக்குதலில் வடிவேலு படுகாயம் அடைந்திருந்ததால் அவரை போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து தப்பியோடியவர்களை வல்லம் போலீசார் தனிப்படை அமைத்து தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒத்தக்கை ராஜா உட்பட கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சை மாவட்டம் புதுக்குடி சமத்துவபுரம் பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த ஏழுப்பட்டியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஒத்தக்கை ராஜா (33), தூத்துக்குடி நாகராஜன் மகன் கார்த்தி (25), பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் மணிகண்டன் (33), மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பழனிச்சாமி மகன் கோபால் என்கிற தினேஷ்குமார் (25), கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சப்பேட்டையை சேர்ந்த கர்ணன் மகன் வீரமணி (26), கிள்ளுக்கோட்டை தனிஸ்லாஸ் மகன் அந்தோணி வில்சன் (25), ஏழுப்பட்டியை சேர்ந்த மணிமாறன் மகன் முத்துமாறன் (46) ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் முத்துமாறன் என்பவர் குருந்தையனால் கொலை செய்யப்பட்ட உலகநாதனின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொலைக்கு பழித்தீர்க்கவே கடந்த 12 ஆண்டுகளாக காத்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.