தஞ்சாவூர்: மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு ஊருக்கு ஒன்றாக இரண்டு அறிவிப்புகள் மட்டுமே தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிக முக்கியமான அறிவிப்புகள் கோவை, மதுரை, சென்னைக்கு சென்று விட்டன என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான நிதி திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என மக்கள் நினைத்திருந்தனர். மிக முக்கியமாக தஞ்சாவூர், திருச்சி மக்கள் தங்கள் பகுதியின் மேம்பாட்டிற்கு இந்த பட்ஜெட்டை வெகுவாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திருச்சிக்கு ஒன்று, தஞ்சாவூருக்கு ஒன்று என 2 அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது.
ரூ. 366 கோடியில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் சூரியூரும், தஞ்சாவூரில் நடுவூரிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேபோல் திருச்சி, தஞ்சாவூர் மாநகராட்சிகளில் அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் திருச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அறிவிப்பாக கருதப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிதாக ஒரு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுதானா எங்களுக்கு என்று திருச்சி, தஞ்சை மக்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்புகள் புஸ்வாணமாக போய்விட்டதால் மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர்.
போக்குவரத்தை சமாளிக்க புதிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் என்று தஞ்சை, திருச்சி மக்கள் எதிர்பார்த்திருந்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.