தஞ்சாவூர்: பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து வரும் ஜூலை 9ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போக்குவரத்து ஏஐடியுசி வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் ஜூலை 9ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியூசி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், பொது மேலாளர் அரசு செயலாளர் போக்குவரத்து துறை செயலாளர் தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் மூலம் பதிவு அஞ்சலில் வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வேலை நிறுத்த நோட்டீசில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் போக்குவரத்து கழகங்கள், மின்சாரம், வங்கிகள், இன்சூரன்ஸ், நிலக்கரி சுரங்கம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை தாராளமாக தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் ஆக வழங்க வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் காலி பணியிடங்களில் கான்ட்ராக்ட், ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும். நேரடி நியமனம் மூலம் வாலிப பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அனைத்து தரப்பினரையும் பாதிக்கின்ற புதிய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்டம் கைவிடப்பட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நிதி அதிகம் ஒதுக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்களை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வேலை நிறுத்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கும்பகோணம் மத்திய சங்க பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் முன்னிலையில், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் மற்றும் மத்திய சங்க பொருளாளர் ராஜ மன்னன், நிர்வாகிகள் செல்வராஜ், தமிழ் மன்னன், அசோகன், முருகவேல், ஸ்ரீதர் ஆகியோர் வேலை நிறுத்தம் நோட்டீஸ் அனுப்பி வைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதே போல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் மூலம் பதிவுத்தபாலில் வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பி வைத்தார்.