தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்  தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்று நடந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 820 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார். இம்மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.  

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், சமூக பாதுகாப்புத் திட்டம் முத்திரை கட்டணம் பூஷணகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தன் மகன் மிரட்டி எழுதி வாங்கிய சொத்தை மீட்டுத்தர கோரி முதிய தம்பதியினர் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, செருபாலக்காடு கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் அவரது  மனைவி காளியம்மாளுடன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 

நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சுதாகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. நாகலிங்கம் ஆகிய நான் வெளிநாட்டில் வேலை பார்த்து செருபாலக்காடு கிராமத்தில் இடம் வாங்கினேன். அதனை எனது மூத்த மகன் பெயரில் பதிவு செய்தேன். அவர் சிறுவயதிலேயே இறந்து விட்டதால் மேற்கண்ட சொத்துகள் எனது மனைவி காளியம்மாள் பெயருக்கு மாறியது. பின்னர் அந்த இடத்தில் பல லட்சம் செலவு செய்து வீடு கட்டினேன்.

இந்த நிலையில், எனது மகன் சுதாகர்  எங்கள் இருவரையும் மிரட்டி எனது மனைவி பெயரில் இருந்த சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு, நிலத்தை பத்திரமாகவும் பதிவு செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி, செருபாலக்காடு கிராமத்தில் உள்ள நிலத்தையும் தனது பெயருக்கு எழுதி கேட்டார். அதற்கு நாங்கள் மறுத்ததால் என்னையும், எனது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

நாங்கள் வீட்டிற்கு வந்தால் எங்களை மிரட்டுகிறார். எனவே, எனது மகன் சுதாகர் எங்களை மிரட்டி எழுதி வாங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்து எங்கள் சொத்தை எங்களுக்கே திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு விவசாயம் சஙகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வெண்ணாறு பிரிவில் இருந்து வரும் மூன்றாம் வாய்க்கால் தலைப்பில் இருந்து பிரிந்து செல்லும் பிரதான வாய்க்காலான கோவில்வெண்ணி வாய்க்கால் தூர்வாராமல் இருப்பதால் கடந்தாண்டு பாதிப்பு ஏற்பட்டது. இதனை மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி கொண்டு உடன் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் வடவாறு பிரிவில் இருந்து வரும் தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை இருபுறம் விடுபட்டுள்ள தூர்வாரப்படாமல் உள்ள வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.