தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரவீன் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.


இந்நிலையில் இன்று மதியம் ஹரிபிரசாத், பிரவீன் மற்றும் அவரது  நண்பர்கள் சிலர் சேர்ந்து திருவையாறு 15-ம் மண்டபம் அய்யப்பன்கோவில் படித்துறை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. அப்போது ஹரிபிரசாத், பிரவீன் ஆகிய 2 பேரும் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் அலறியுள்ளனர். 


இதை பார்த்த சக நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம்  அதிகம் இருந்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே கரைக்கு வந்து பொதுமக்களிடம் இதுகுறித்து கதறிக்கொண்டே தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தண்ணீரில் ஹரிபிரசாத், பிரவீன் ஆகிய இருவரும் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினர். தொடர்ந்து பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து மாணவர்களை தேடினர்.


சற்று தொலைவில் இரு மாணவர்களையும் மயங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது