தஞ்சாவூர்: தஞ்சை அருகே சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை நிலக்கடலை விழுங்கி பேராபத்தில் சிக்கியது. இதனை என்டரஸ்கோபிக் மூலம் அகற்றி குழந்தையின் உயிரை தஞ்சாவூர் டிவிஎஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் காப்பாற்றி உள்ளனர். 


தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயதுள்ள ஆண்குழந்தை வீட்டில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் நிலக்கடலை உறித்துக் கொண்டிருந்த இடத்தில் கிடந்த நிலகடலை ஒன்றை எடுத்து விழுங்கி உள்ளது.  இதை பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இதையடுத்து 2 வது நாளில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் அளவு குறையாமல், இருமல் ஏற்பட்டுள்ளது.




தொடர்ந்து எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நிமோனியா காய்ச்சலாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 14 நாட்கள் கடந்த நிலையில் திடீரென்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சி டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வலது மூச்சுக்குழாயில் அடைப்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது. உடனடியாக அக் குழந்தைக்கு எண்டோஸ்கோப்பி (ENDOSCOPY) போட்டு சரி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் டாக்டர் டி வி எஸ் பல்நோக்கு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.


இதையடுத்து டாக்டர் டி.வி.சாத்தப்பன் தலைமையில் டாக்டர்கள் அம்ருதா., (காது, மூக்கு, தொண்டை, அறுவை சிகிச்சை நிபுணர் ), சசிகுமார், (நுரையீரல் சிறப்பு நிபுணர் ), சம்பத் (மயக்கவியல் நிபுணர் இணைந்து தீவிர சிகிச்சையாக குழந்தைக்கு எண்டோஸ்கோப்பி  செய்ததில் வலது நுரையீரலில் முக்கிய மூச்சுக்குழாயில் ஊறிபோன நிலையில் நிலக்கடலை சேதமடைந்து இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த நிலக்கடலை அகற்றப்பட்டு  குழந்தை காப்பற்றப்பட்டது. 


இது குறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் டி.வி.சாத்தப்பன்  கூறுகையில், வாயின் உள் பக்கத்தின் கீழே உணவு குழாய், மூச்சுக் குழாய் இரண்டும் அடுத்தடுத்த நேர்க்குழாயாக அருகருகே உள்ளது.  சில சமயங்களில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரின் கவனக் குறைவால் மோதிரம், எலக்ட்ரானிக் பேட்டரி, தோடு,மூக்குத்தி, ஆணி, காசு போன்றவற்றை வாயில் வைத்து விளையாடும் போது விழுங்கி விடுகிறார்கள். 


இவை எல்லாம் எக்ஸ்ரேவில் தெரியும். இதுவே, இரைப்பையில் போனால் சில சமயம் பெரிய ஆபத்தாக நேரலாம். பெரும்பாலும் மலக்குடல் வழியாக வந்து விடும். ஆனால் மூச்சுக் குழாய் என்பது ஒரு வழிப் பாதை. எனவே, மூச்சுக் குழாயில் சிக்கிய பொருட்க. பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக கடலை வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி வகைகள் உணவு குழாய்க்கு செல்லாமல் மூச்சுக் குழாயில் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தகூடும்.


இவை எக்ஸ் ரேயில் தெரியாது. இதுபோன்று குழந்தைகள் ஏதேனும் பொருட்களை விழுங்கிவிட்டார்கள் என தெரிந்தால் வாழைப்பழம் கொடுப்பதை தவிர்த்து. அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடன் அழைத்து செல்ல வேண்டும். நிலக்கடலை விழுங்கிய குழந்தைக்கு எண்டோஸ்கோபிக் செய்யப்பட்டு தற்போது  நலமாக உள்ளது. குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிலக்கடலை போன்ற பொருள்கள் எக்ஸ்ரேயில் தெரியாததால்  ஸ்கேன் வாயிலாக தெரியவரும். அதுபோல்தான் இந்த குழந்தைக்கு மூச்சுக் குழலில் நிலக்கடலை சிக்கி இருப்பது தெரியவந்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.