மன்னார்குடியில் மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் இணைப்பு எண்களை ஒட்டி நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. நேற்று முன் தினம் இப்பகுதிக்கு வந்த நபர் ஒருவர் தான் மின்வாரியத்தில் இருந்து வந்திருப்பதாகவும் வீட்டில் உள்ள மின் இணைப்பு எண்களை ஸ்டிக்கர்களாக ஒட்டித் தருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே அவர் அச்சிட்டு வைத்திருந்த மின்வாரிய சின்னம் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டையில் வீட்டில் இருப்பவர்களிடம் மின் இணைப்பு எண்ணை கேட்டு அதற்குரிய எண்களை அந்த பிளாஸ்டிக் அட்டையில் ஒட்டி தந்துள்ளார். மின் இணைப்பு ஒன்றுக்கு நூறு ரூபாய் என வசூல் செய்துள்ளார் அந்த மர்ம நபர். இதுபோல் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்வாரியத்தில் இருந்து வருவதாக கூறி ஏமாற்றி ஸ்டிக்கர் ஒட்டி பணம் பெற்று சென்றுள்ளார். இது குறித்து மன்னார்குடி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின்வாரியம் சார்பாக இதுபோன்று எங்கும் நடைபெறவில்லை என்றும் இது போன்று சில நபர்கள் மோசடியில் ஈடுபடுவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரியிடம் கேட்ட பொழுது, மின்வாரியத்தில் இருந்து இதுவரை இது மாதிரியான எந்த அறிவிப்புகளும் வெளியிடவில்லை. ஆகையால் பொதுமக்கள் இதேபோன்று செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார்கள் கொடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மன்னார்குடி பகுதியில் மட்டுமல்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதே போன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.