திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளை நம்பியே தங்களது கல்வியை கற்று வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் அரசு பள்ளியில் கட்டிட வசதி  கழிவறை குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என தொடர்ந்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழக முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து தரமற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்றி விட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு தரமற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வந்தன. இருந்த போதிலும் பல அரசு பள்ளிகளில் இன்னும் தரமற்ற கட்டிடங்கள் இடிக்கப்படாத நிலையில் உள்ள காரணத்தினால் இன்று ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு மாணவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.




திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 623  மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து சிமெண்ட் காரை விழுந்ததால்  பத்தாம் வகுப்பு படிக்கும் தயாளன் என்ற மாணவருக்கு தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாணவனை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் சேதமடைந்து உள்ள நிலையில் வேறு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து விட வேண்டும் என கூறியுள்ள நிலையில் ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு தரமற்ற நிலையில் உள்ள கட்டிடத்தை இதுவரை இடிக்காதது ஏன் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உடனடியாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோர்கள் வைத்துள்ளனர்.




இந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சீதக்கமங்கலம் ஊராட்சியில் உள்ள மேலராமன்சேத்தி தெருவில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த நிலையில்  இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரங்களில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை என்பது பெய்தது. இந்த கனமழையில் பள்ளி வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்ததில் அருகில் உள்ள பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. பள்ளியில் மேற்கூரையில் வகுப்பறைக்குள் பெயர்ந்து விழுந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளி கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் மாணவ, மாணவிகளை அருகில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிகமாக ஆசிரியர்கள் தேர்வு எழுத வைத்துள்ளனர். அந்த வீட்டில் மிக குறுகிய அளவிலிலேயே இடம் இருந்ததால்  35 மாணவர்கள் ஒரே இடத்தில் தேர்வு எழுதியது நெருக்கடியான ஒன்றாக இருந்துள்ளது. இந்தப் பள்ளியிலும் உடனடியாக கட்டிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த பகுதி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Also Read | Traffic Rules Fine: அன்று அவ்வளவு.. இன்று இவ்வளவு.. புதிய கட்டண விதிமுறைகளும், அபராதமும்.. முழு விவரம்!