திருவாரூர் மாவட்டம் வடகண்டம் கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வடகண்டம் சீவெளி பாலவை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தற்பொழுது 112 மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மழையின் காரணமாகவும் அடுத்த நான்கு நாட்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி விடுமுறை முடிந்த பிறகு நேற்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் எப்பொழுதும் போல் வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தூய்மை செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் இன்று காலை பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
அப்பொழுது வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்து கொண்டிருக்கும் பொழுது மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பதை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரிஜாவிற்கு தூய்மை பணியாளர்கள் மகாத்மா காந்தியின் முழு திருவுருவ சிலை உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை ஆசிரியர் கிரிஜா மகாத்மா காந்தி சிலை சேதப்பட்டு இருப்பதை நேரடியாக பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த பள்ளியில் மகாத்மா காந்தியின் முழு திருவுருவ சிலை என்பது அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த சிலையை சேதப்படுத்தியது யார் என்பதை குறித்து குடவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வடகண்டம் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வடகண்டம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை உடைத்து அங்குள்ள சிலிண்டர் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்கள். இது சம்பந்தமாக குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைக்க முயற்சி செய்துள்ளார்கள் தொடர்ந்து வடகண்டம் பகுதியில் அதிகளவில் திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை இந்த பகுதியில் தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள மகாத்மா காந்தியின் திருஉருவ சிலையை மது போதையில் யாரேனும் உடைத்து உள்ளார்களா அல்லது தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்த நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து குடவாசல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வட கண்டம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து பலமுறை காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடகண்டம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.