கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 8 சவரன் தங்க நகையும் அருகில் உள்ள வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் காட்டூர்  முதலியார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  சக்திவேல். இவர் திருவாரூரில் மூன்றாம் சேத்தி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து சக்திவேல் ஊருக்கு சென்றதால் அந்த வீடு கடந்த ஒரு வார காலமாக பூட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் அதே காம்ப்ளக்சில் உள்ள வாடகைக்கு வந்து 10 நாட்களே ஆன கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலை ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவரது வீட்டில் பூட்டையும் அவர்கள் உடைத்துள்ளனர். அங்கு பீரோவில் 2000 பணம் மட்டும் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு திருடர்கள் பீரோவை உடைக்காமல்  படுக்கையறை லைட்டை மட்டும் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.




இதனை அடுத்து சென்னைக்கு சென்றிருந்த சீனிவாசன் காலையில் வீடு திரும்பியவுடன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தாலுகா காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில்  கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 8 சவரன் தங்க நகையும் அருகில் உள்ள வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் மேலும் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் இல்லையென்றால் இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்வதற்கு மிகுந்த அச்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க செயலில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்