தஞ்சாவூர்: தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கிராமங்கள், நகரங்களில் உள்ள நீர் நிலை பொது இடங்கள் இனி இருக்காது. ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர வாய்ப்பிருக்காது. மொத்தத்தில் இந்த சட்டத்தால் நீர் நிலைக்கும், விவசாய நிலத்துக்கும் பாதிப்பு தான் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்தார்.


தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நிலம், நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.


கருத்தரங்கத்துக்கு மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசியதாவது: தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவசர அவசரமாக நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. கடைசி நாளில் 17 மசோதாக்கள் கொண்டு வந்ததில், இந்த சட்டமும் ஒன்று.


இந்த சட்டத்தின் சாரம்சம் குறித்து எம்எல்ஏக்களுக்கு கூட தெரியவாய்ப்பில்லை. ஆனால் இந்த சட்டத்தால் நீர் நிலைகள் காணாமல் போகும், 250 ஏக்கருக்கு மேல் தொழில் தொடங்க வேண்டும் என அரசுக்கு விண்ணப்பித்தால் நீர் நிலையை கொடுக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நிலம் கேட்டவரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படாது, நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதற்காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவும் அரசு அதிகாரிகளை கொண்ட குழு தான். நில ஒருங்கிணைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், கிராமங்கள், நகரங்களில் உள்ள நீர் நிலை பொது இடங்கள் இனி இருக்காது. ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர வாய்ப்பிருக்காது. இந்த நீர் நிலைகள் அடங்கியுள்ள பகுதியில் சிறு சிறு விவசாயிகளின் நிலங்கள் இருந்தாலும் அந்த நிலைத்தையும் எடுத்து கொள்ளலாம். மொத்தத்தில் இந்த சட்டத்தால் நீர் நிலைக்கும், விவசாய நிலத்துக்கும் பாதிப்பு தான்.


எந்த ஒரு விவசாயிகளும் இப்படி ஒரே சட்டத்தை கேட்கவில்லை, ஆனால் அரசு ஏன் இந்த சட்டத்தை கொண்டு வந்தது எனத் தெரியவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒட்டுமொத்த விவசாயிகளையும், பொதுமக்களும் பாதிக்கக்கூடிய இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடி வரும். இந்த சட்டங்களின் பாதிப்புகள் குறித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றார்.


கருத்தரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.