தஞ்சாவூர்: கோடைக்காலத்தை விட அதிக வெயில் செப்டம்பர் மாதத்தில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தஞ்சையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடைக்காலமாகும். இந்த மாதங்களில் மிக அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் இருக்கும். ஜூன் மாதத்தில் இருந்து வெயிலின் அளவு குறைய தொடங்கும். ஆனால் பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் முடிந்தும் தற்போது வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகிறது. தமிழகத்தில் மார்ச் கடைசியில் தொடங்கி ஜூலை வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்கும், இந்தாண்டு பிப்ரவரியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கி ஆகஸ்ட் வரை தாக்கம் இருந்தது.
மழையை காணோம்... வறண்டு கிடக்கும் கண்மாய்கள்
செப்டம்பரில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை தொடங்கி விடும். வெப்பத்தின் தாக்கம் குறைந்து விடும், மழை காரணமாக கண்மாய்கள், கால்வாய்கள், வரத்து கால்வாய்களில் நீரோட்டம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் இந்தாண்டு மழையும் இல்லை. ஆனால் அக்னி நட்சத்திர வெயிலை மிஞ்சும் வகையில், தமிழ்நாடு முழுவதும் சூரியன் அதிக அளவில் சுட்டெரிப்பு வேலையை வேலையை காட்டி வருகிறது. வழக்கமாக மே மாதங்களில் மட்டும் சதமடிக்கும் வெயில், தற்போதும் சர்வ சாதரணமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது.
அதிராம்பட்டினத்தில் 102 டிகிரி வெயில் பதிவு
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவாக அதிராம்பட்டினத்தில் 102 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இந்தக் காலகட்டங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியோா் பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனா். வெயிலின் வெப்ப கதிா்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
கோடையை போல் கொளுத்தும் வெயில்
தஞ்சை மாவட்டத்திலும் கோடைக்காலம் போல் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தஞ்சை, வல்லம், பூதலூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, போராவூரணி, அதிராம்பட்டினம், பாபநாசம், சாலியமங்கலம், அம்மாபேட்டை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தினமும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.
அதாவது ஏப்ரல், மே மாதங்களில் பதிவாகும் வெப்ப அளவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த செப்டம்பர் மாதத்தில் வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. இடையில் அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் அது வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. தஞ்சையில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் வேளையில் அனல் காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
குளிர்பான கடைகளை தேடி ஓடும் மக்கள்
மேலும் தலை மற்றும் முகத்தை துணியால் மூடியப்படியும், குடைப்பிடித்தபடியும் பலர் செல்கின்றனர். செப்டம்பர் மாதத்திலும் வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், கரும்புசாறு, சர்பத், மோர், பழச்சாறு, குளிர்பானங்களை அதிகளவில் பருகி வருகின்றனர். எனவே வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழை எப்போது பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.