தஞ்சாவூர்: தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இன்று குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இந்தாண்டு விற்பனை இலக்கு ரூ.1.57 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பார்வையை மாற்றிய நிறுவனம்
அரசு நிறுவனம் என்றாலே மக்களுக்கு இருக்கும் பொதுவான பார்வையை முற்றிலும் மாற்றியிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். கோ-ஆப்டெக்ஸ் கடைகளின் அமைப்பு, அங்குள்ள தயாரிப்புகளின் தரம், வாடிக்கையாளர் சேவை என எதிலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் சளைத்ததில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தீபாவளிக்கு சிறப்பு விற்பனை
கைத்தறி நெசவாளர்கள் தங்களின் தயாரிப்புகளை பல தனியார் நிறுவனங்களின் போட்டிக்கு இடையில் சந்தைப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவே அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் அவர்களை அரவணைத்திருக்கிறது. 1935-ல் தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் 28 கூட்டுறவு சங்கங்களுடன் தனது சேவையைத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் தீபாவளிக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை கோ-ஆப்டெக்ஸில் நடந்து வருகிறது.
அந்த வகையில் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்து தெரிவித்ததாவது:
நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.
நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள். காஞ்சிபுரம். சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள். திரைச்சீலைகள், மிதியடிகள். நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
ரூ.1.57 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம்
தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023ல் ரூ.129.99 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2024க்கு ரூ.157 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது.
வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், மக்கள் செய்தி தொடர்பாளர் மதியழகன், தஞ்சாவூர் வைரம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.