தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 93 கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கிய முதல் நாளில் வணிகர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரை கண்டித்து சாலை மறியல் செய்து கோஷமிட்டதால் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஒரு கடை மட்டுமே ஏலம் விடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தின் போதும் திமுகவினரும் வணிகர்களும் ஏலம் நடைபெறும் இடமான அலுவலகத்திற்குள் சென்று கண்டன கோஷமிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவர்ளை அப்புறப்படுத்தினர்.   அப்போது, போலீசார் போராட்டம் செய்தவரை, பலவந்தமாக அப்புறப்படுத்தி, ஏலம் நடக்கும் இடத்திலிருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் வணிகர்கள், திமுகவினர் ஏலம் நடக்கும் இடத்தில் அமர்ந்தனர். ஆனாலும் ஆணையர் சரவணகுமார் எதிர்ப்பையும் மீறி 26 கடைகளும், 13 ஆம் தேதி 57 கடைகளும் ஏலம் விடப்பட்டன. இதில், போட்டி அதிகமாக இருந்ததால், மாத வாடகையாக ரூபாய் 50,000 முதல் ரூபாய் 70,000 வரை ஏலம் போனது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூபாய் 9.50 கோடி வருவாய் கிடைத்தது.


இதைத்தொடர்ந்து, நான்காவது நாளில் மீதமுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டன. இதில், பழைய பேருந்து நிலையத்திலுள்ள ஒரு கடை மாத வாடகையாக ரூபாய் 57,000க்கு ஏலம் போனது. மேலும், பழைய பேருந்து நிலையத்திலுள்ள 2 உணவகங்கள், திருவையாறு பேருந்து நிலையத்திலுள்ள 8 உணவகங்களில் 3 உணவகங்கள் மாத வாடகையாக ரூபாய் 25,000 முதல் 27,000 வரையிலும் ஏலத்தில் எடுக்கப்பட்டது. திருவையாறு பேருந்து நிலையத்திலுள்ள ஒரு பெரிய கடை மாத வாடகையாக ரூபாய் 1.07 லட்சத்துக்கு ஏலம் போனது. மாநகராட்சி கடை ரூபாய் 1.07 லட்சத்திற்கு ஏலம் போனதையறிந்த வணிகர்கள், மாநகராட்சி அலுவலர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதுவே, அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதாகவும், நான்கு நாள்களில் நடைபெற்ற ஏலம் மூலம் மாநகராட்சிக்கு ஏறத்தாழ 11 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், மாநகராட்சி வரலாற்றில் இது அதிகபட்ச வருவாய் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.