திருத்துறைப்பூண்டி - காரைக்குடி ரயில் மார்க்கத்தில் கேட் கீப்பர்களை நியமிப்பது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்த நாகை எம்.பி.

 

திருவாரூர்-காரைக்குடி ரயில் மார்க்கம் வரலாற்று பாரம்பரியமிக்க ரயில் பாதையாகும். மீட்டர் கேஜ் காலத்தில் சென்னையிலிருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டன. 1914 முதல் இயக்கப்பட்ட இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் படகு மெயில் எக்ஸ்பிரஸ் (Boat Mail Express)  நூற்றாண்டு பயணத்தை நிறைவு செய்த ரயில் பாதையாகும். அகல ரயில்பாதை அமைக்கும் பணிகளுக்காக பத்தாண்டுகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அகலப்பாதை பணி நிறைவடைந்த பின் கடந்த 2019 ஜூன் மாதத்திலிருந்து திருவாரூர் முதல் காரைக்குடி வரை ஒரு டெமோ ரயில் இயக்கப்பட்டது.

 

இதற்கு திருவாரூர் மாவட்ட ரயில் பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர். இந்த மார்க்கத்தில் 72 ரயில்வே கேட்டுகளுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் 3 மணி நேரத்தில் செல்ல வேண்டிய பயணத்தை 7 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இயங்கிய அந்த ஒரு டெமோ ரயிலும் நிறுத்தப்பட்டது. 



 

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ், எம்.பி., அவர்கள் நாடாளுமன்றத்தில் திருத்துறைப்பூண்டி காரைக்குடி ரயில் சேவை மற்றும் பணியாளர்கள் நியமிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி வந்த நிலையில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர், ரயில்வே இயக்குனர், தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோரை நேரில் சந்தித்தும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் வலியுறுத்தினார்கள்.

 

மத்திய அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று புதுடெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் மீண்டும் டெமு ரயில் சேவை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.



 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான  க.மாரிமுத்து உள்ளிட்டோர் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது திருவாரூர்-காரைக்குடி ரயில் மார்க்கத்தில் முழு ரயில் சேவையைத் தொடங்குவதற்கு ஏதுவாக 72 இடங்களிலும் ரயில்வே கீட் கீப்பர்களை நியமித்திடவும், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட போட் மெயில் எனப்படும் சென்னை - ராமேஸ்வரம், கம்பன் எக்ஸ்பிரஸ் எனப்படும் சென்னை - காரைக்குடி ரயில் உட்பட அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும்.



 

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் 2021க்குள் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளதால் LUS எனப்படும் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு சுரங்கப்பாதை அமைப்பது, மேம்பாலங்கள் கட்டுவது, நான்கு இடங்களில் கேட் கீப்பருடன் ரயில்வே கேட் நடைபாதை அமைப்பது போன்றவை விரைவில் முடிக்கப்பட வேண்டும். அதிகமான வருமானம் வரக்கூடிய  முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி மேம்படுத்திட வேண்டும். கீழ்வேளூர், கொரடாச்சேரி, நன்னிலம், பேரளம் நிலையங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும். கொரோனா தொற்று பரவலால் நிறுத்தப்பட்ட  காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் சேவை மீண்டும் இயக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தினார்கள். கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட தென்னக ரயில்வே மேலாளர் ஜான்தாமஸ்  விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். குறிப்பாக திருவாரூர் - காரைக்குடி ரயில் மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் நியமனம் கூடிய விரைவில் நடைபெறும் என   உறுதியளித்துள்ளார்.