தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 13- வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். விழாவில் கருப்பு உடையணிந்து வந்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவரை போலீஸார் வலுக்காட்டாயமாக வெளியேற்றியதால் சற்றே பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 13- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆண்டறிக்கையை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வாசித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது: தமிழ் இலக்கியம் என்பது மாபெரும் கடல். பற்பல வகைகள், பற்பல முறைகள், தகவல்கள் எனும் பெரும்பரப்பைக் கொண்டது. இன்னும் வெளியே எடுக்கப்படாத தங்கப் பாளங்கள் பல இந்த சுரங்கத்துக்குள் உள்ளன. எடுத்துக் கோர்க்கப்படாத முத்துக்களும், பவழங்களும் இந்தக் கடலுக்குள் மின்னிக் கொண்டுள்ளன. 


வைரங்களும், கோமேதங்களும், மாணிக்கங்களும், மரகதங்களும் தமிழ் எனும் தனிப்பெரும் மலையின் இலக்கிய மடிப்புகளுக்குள் பொதிந்து கிடக்கிறது என்றார். தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னாள் காவல் அதிகாரிகள் கு.பெரியய்யா, அ.கலியமூர்த்தி உள்பட 325 பேருக்கு, முனைவர் பட்டங்களை வழங்கி உறுதிமொழியினை வாசித்தார்.




முன்னதாக தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு வரும் ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில்  குவிக்கப்பட்டிருந்தனர்.


அப்போது விழா அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பான, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்து எம்.பில்., பட்டம் பெற வந்திருந்தார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். அப்போது அங்கு வந்த புலனாய்த்துறை மற்றும் தனிப்பிரிவு, க்யூ பிரிவு போலீஸார் அரவிந்த்சாமியை அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர்.

மேலும் அவர் கருப்பு சட்டை அணிந்திருந்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் கருப்பு கொடி உள்ளிட்ட ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் அவரை சோதனை நடத்திய பின்னர் மீண்டும் விழா அரங்குக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ஆளுநர் விழா அரங்கத்துக்குள் வந்ததும் அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று போலீஸார் தங்களது பாதுகாப்பில் அவரை வைத்துக் கொண்டனர்.

அதே போல் முனைவர் பட்டம் பெற வந்த தமிழ்நாடு மாணவர் கூட்டியக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜான்வின்சென்ட் என்பவரையும் போலீஸார், பட்டம் பெறுவதற்கு முன்பாக அவரையும் வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் அரங்கத்தில் சற்றே சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்ற பின்னர், பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் அரவிந்தசாமி மற்றும் ஜான்வின்சென்ட் ஆகியோருக்கு பட்டங்களை வழங்கினார்.