மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சிலப்பதிகார வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாசிகள் வருகை புரிந்து கண்ணகி, கோவலன் வரலாற்றையும், கடற்கரை அழகையும் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் பொழுதை கழித்து மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கு ஏராளமான இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களும் படையெடுக்கின்றனர். ஆனால், இங்கு கடலில் குளிப்பது ஆபத்தானது என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ள போதிலும், அதனை இங்கு வருபவர்கள் சிறிது கண்டுகொள்வது இல்லை.




இதன் காரணமாக இங்கு அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதிலும்  உயிரிழப்பு விகிதம் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்பதே அதிர்ச்சியான உண்மையாகும். இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை கொத்த தெரு பகுதியை சேர்ந்த 31 வயதான பாலமுருகன் என்பவர் வெளிநாடு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பி உள்ளார். அவரும் அவரது நண்பருமான அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வரும் அரவிந்தன், இவர்கள் இருவரும் நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக மேலும் சில தனது நண்பர்களுடன் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.




அங்கு அவர்கள் கடலில் குளித்த போது அப்போது  ஏற்பட்ட ராட்சத ஆலையில் சிக்கி பாலமுருகன், அரவிந்தன் ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களால் நீந்தி கரை திரும்ப முடியாத நிலையில் கடலில் மூழ்கி இருவரும் மாயமாகினர். இதனை அறிந்த அவர்களுடன் உடன் வந்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் காவல்துறையினர், மீனவர்கள் உதவியுடன் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


Chennai : மகனை அடித்துக் கொன்ற தாய்...! சென்னையில் நடந்தேறிய பகீர் சம்பவம்..! காரணம் என்ன ?




அப்போது கண்ணகி சிலை எதிரே இறந்த நிலையில் அரவிந்தனின் உடல் கரை ஒதுங்கியதை அடுத்து  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாயமான பாலமுருகன் உடலை தேடும்படியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  தொடர்ந்து இதுகுறித்து பூம்புகார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பூம்புகார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.