மதுரவாயல் ( maduravoyal news ) : சென்னை மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஹரி (45), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (38), இவர்களது மகன் பூவரசன் (23). பூவரசன் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து யாரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தாய், மகன் இருவருக்கும் தலையில் இரும்பு ராடால் பலமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தனர். 

 



மதுரவாயல் காவல் நிலையம் -maduravoyal police station


 



மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு ( maduravoyal police station )

 

இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  பூவரசன், மற்றும் செல்வி இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியிடம் விசாரித்து வந்தனர்.  செல்வியிடம் மதுரவாயில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்,  கடுமையான மன அழுத்தத்தில் இருந்த செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தன்னையும் தாக்கி கொண்டது தெரியவந்தது. 

 


மதுரவாயல் காவல் நிலையம் -- Madhuravoyal Police Station


 

இதுகுறித்து மதுரவாயில் காவல்துறையினர் தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது தெரிவித்ததாவது : செல்வி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக இரவில் தூங்காமல் இருந்து வந்ததாகவும் இதற்காக செல்வி தினசரி தூக்க மாத்திரை எடுத்து வந்துள்ளார். இதற்கிடையே சம்பவம் நடந்த அன்று செல்வியை சொந்த ஊருக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்க்க முடிவு செய்திருந்தனர். அதற்கான பணிகளை பூவரசன் செய்திருந்தார்.

 


சம்பவம் நடைபெற்ற வீடு


 

இரவு கணவர் ஹரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மன அழுத்தத்தில் இருந்த செல்வி அருகில் தூங்கி கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு ராடால் தாக்கியுள்ளார். பின்னர் செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வெளி நபர்கள் யாராவது ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்தபோது வெளிநபர்கள் யாரும் உள்ளே வராததும் தெரியவந்தது. மேலும் செல்வி தமது மகனை தானே தாக்கியதாக கூறிய நிலையில் செல்வியே தனது மகனை இரும்பு ராடால் தாக்கியது உறுதியானது. இந்த நிலையில் செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.