தஞ்சாவூர்: ஆவணி மாதம் ஆரம்பித்த நிலையில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஆடி மாதத்தில் அதிகளவு விசேஷங்கள் நடக்காது. கோயில் திருவிழா, ஆடி வெள்ளி போன்று கோயில் திருவிழாக்கள் நடக்கும். இதனால் பூக்கள் விலை சராசரியாக, சற்று கூடுதலாக விற்பனையானது. தற்போது ஆவணி மாதத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்கள் வாங்குவர்.

விசேஷ தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று அதிகரிக்கும். வரத்து, விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும். இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளது. நேற்றும், இன்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.




இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகளவில் தேவைப்பட்டது. இதனால் இன்று தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. அதன்படி மல்லிகை கிலோ ரூ. 800-க்கும், முல்லை கிலோ ரூ. 800, ஆப்பிள் ரோஸ் ரூ. 250, கனகாம்பரம் கிலோ ரூ. 800, சம்பங்கி ரூ. 600, அரளி ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டன.

தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளது. சுபநிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கும். இதனால் பூக்களின் தேவையும் அதிகரிக்கும். உதிரிப்பூ, மாலை, தோரணம் கட்ட பூக்கள் என்று பூக்களின் தேவையும் அதிகரிக்கும். இதன் அடிப்படையிலேயே இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது என்றனர்.

ஆடிக்கு பிறகு நன்மைகள் கூடி வரும் என்பதே முதுமொழி. தமிழ் மாதங்களை பொறுத்தவரை ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முதல்  பங்குனி மாதம் வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு.

அதில் ஆவணி மாதத்தில் தான் சூரியன் சொந்த வீட்டில் வலுவாக அமருவார். பொதுவாக சூரியனே ஆத்மகாரகனாகவும், பிதுர்காரகனாகவும்  அழைக்கப்படுகிறார். இதனால் சூரியன் வலுவடையும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலன்களை பெறலாம் என்பது ஜோதிட வல்லுனர்களின் வாக்கு. அதிலும் குறிப்பாக ஆவணி மாதங்களில்  வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.

ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம் என்கின்றனர் வாஸ்து, ஜோதிட நிபுணர்கள். இந்த மாதத்தில்  திருமணம் செய்து கொள்பவர்கள் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு. ஆடி மாதம் முடிந்ததும் முகூர்த்த நாட்கள் வரிசைக்கட்டும். பொதுவாகவே ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் வாமன அவதாரம் எடுத்த நாள். இந்த நாள் மகாபலி சக்கரவர்த்திக்கு உகந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்திக்காக வீட்டின் வாசலில் அத்தப் பூக்கோலம் போட்டு புத்தாடை உடுத்தி விதவிதமான சுவையான பதார்த்தங்கள் செய்து  மகிழ்ந்து கொண்டாடுவர். கிருஷ்ண அவதாரம்  இந்த ஆவணி மாதத்தில் அஷ்டமி நட்சத்திரத்தில் நடைபெற்ற தினத்தையே கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம்.

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில்  விநாயகரை வணங்கி, சந்திர தரிசனம் செய்தால் வாழ்வின் சங்கடங்கள் தவிடுபொடியாகி விடும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள். இப்படி அனைத்து விசேஷங்களுக்கும் சிறப்பான மாதமாக ஆவணி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் அதிகளவில் முகூர்த்த நாட்கள் வரும். இதனால் மங்கலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இதில் முன்னிலையில் பூக்கள் உள்ளது. ஆவணி ஆரம்பத்திலேயே பூக்களின் விலை கடுமையாக உயரத் தொடங்கி உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.