தஞ்சாவூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் தஞ்சையில் உள்ள திருச்சி டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் முத்தரசு (54). இவர் ஆரம்பத்தில் தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். பின்னர் நெல்லை மாவட்ட ஆவணக் காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.
இதற்காக அவர் திருச்சியில் உள்ள வீட்டில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார். தஞ்சையில் நாஞ்சிக்கோட்டை சாலை கல்யாணசுந்தரம் நகரிலும் இவருக்கு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார். அதில் கீழ் தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள வீட்டில் வாடகைதாரர்கள் வசித்து வருகிறார்கள். இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையில் முத்தரசு வந்து செல்லும்போது ஓய்வெடுப்பதற்காக ஒரு அறை உள்ளது.
இந்நிலையில் முத்தரசு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல இடங்களில் அவர் லஞ்சம் பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
இதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள முத்தரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அருண் பிரசாத் தலைமையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் தஞ்சையில் உள்ள வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். பின்னர் வீட்டிற்கு சென்று கதவை பூட்டிவிட்டு அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு அறையாக சோதனை இட்டனர். ஏதாவது ஆவணங்கள் சிக்குகிறதா? என பார்த்தனர். இதையடுத்து சோதனை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதில் எந்த ஒரு ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.