மிக்ஜாம் புயல் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்ததை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 8 நாட்களுக்குப் பிறகு அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வேதாரண்யம், கோடியக்கரை, ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5000 மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் அந்தந்த கடற்கரை பகுதிகளிலும் துறைமுகங்களிலும் 28ஆம் தேதி முதல் 8 நாட்களாக நாகை மாவட்ட மீனவர்கள் அவர்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதித்திருந்த நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டதால் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன்வளத்துறையினர் தடையை நீக்குவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்குச் செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் தண்ணீர், உணவு பொருட்களை சேகரித்து வந்த நிலையில் நேற்று இரவு கடலுக்குச் செல்ல விதித்த தடையை நீக்கியதால் இன்று அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சிறு தொழில் எனப்படும் கரைப்பகுதியில் நாட்டுப் படகில் சென்று மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் அதிகாலை சென்ற அவர்கள் மீன் பிடித்து கரை திரும்பி வருகின்றனர். அவர்கள் பிடித்து வந்த மீனை உள்ளூர் மீன் பிரியர்கள் மட்டுமல்லாமல் நாகூர் வேளாங்கண்ணி வந்த சுற்றுலா பயணிகளும் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். நேற்று இரவு தடை நீக்கியதால் உடனடியாக கடலுக்குச் செல்ல தேவையான டீசல் ஐஸ் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க முடியாத மீனவர்கள் இன்று அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குச் சென்றுள்ளனர் நாகை மாவட்ட மீனவர்கள்.