தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலின் பெருமை தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.


தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது ஹரித்ரா விநாயகர் கோயில். இக்கோயிலோட சிறப்பு என்ன தெரியுங்களா? காரைக்குடிக்கு அருகிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டால் எப்படி அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறுகிறதோ அதேபோல் தஞ்சை பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகரை வழிபட்டால் சர்வ மங்களமும் கிடைக்கிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.


விநாயகரது அருளைப்பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகியவை உகந்த நாட்களாகும். செவ்வரளி, மஞ்சள் அரளி போன்ற மலர்களை சாற்றி  வணங்கினால் கூடுதல் சிறப்பு.
 
சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். தடைபட்ட திருமணம் தக்க காலத்தில் நடைபெற மஞ்சளால் பிடித்து வைத்த விநாயகரை, 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்து பலன் பெறலாம். குடும்பத்தின் வறுமை நிலை நீங்க வெள்ளெருக்கு திரி போட்டு  நெய்தீபம் ஏற்றி விநாயகரை வழிபடலாம். இப்படி எளிமையான முறையில் விநாயகர் வழிபாடு அனைத்து சங்கடங்களையும் நீக்கி வாழ்வில் வளம் பெற வைக்கும். 


சரிங்க இந்த வல்லம் பிள்ளையார்பட்டி கோயிலுக்கு எப்படி போகலாம். தஞ்சாவூர்-வல்லம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டியில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. ஊர் பேரிலேயே பிள்ளையார் வந்துவிட்டார். தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் சரி, இக்கோயிலுக்கு வரும் பிற மாவட்ட, மாநிலத்தை சேர்ந்தவர்களும் சரி இவ்விநாயகரை பிள்ளையார்பட்டி விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர். பிள்ளையார்பட்டி பிள்ளையாருக்கென்றே தோன்றிய கிராமமாகும். இதிலிருந்தே இக்கோயிலின் பெருமை தெரிய வரும்.


இக்கோயிலின் வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பலி பீடமும், நந்தியும் அமைந்துள்ளது. கருவறைக்குச் செல்வதற்கு முன்பாக வலது புறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் மூலவராக விநாயகர் அமர்ந்த நிலையில் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலதுபுறம் மற்றொரு விநாயகர் உள்ளார். இடதுபுறம் லிங்கம் உள்ளது. திருச்சுற்றில் கால பைரவர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் நாகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சிலைகள் உள்ளன.


இத்தலத்து விநாயகரிடம் பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகள், வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படுகிறது. இக்கோயிலில் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி ஆகியவை சிறப்பாக நடக்கிறது.


கார்த்திகை சோம வாரத்தில் விபூதி அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரே கல்லினால் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் 11 அடி. தரை மட்டத்துக்கு கீழே அமைந்துள்ள அடிபீடம் 5 அடி கொண்டது. 9ம் நூற்றாண்டை சிறப்பித்த மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில்தான், இந்த வியத்தகு ஊரும், கோவிலும் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே இத்தலத்தின் பழம் பெருமையை நமக்கு விளக்குகிறது.


சோழர் கால கட்டிட அமைப்பில் கோவில் அமைந்துள்ளது. 11 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ள பிள்ளையாரை பீடத்தில் அமர்த்தி, அதன் மீது ஆலயத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கான அடையாளங்களும் உள்ளன. பெரிய பிள்ளையாரை தரிசிக்க, மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவுவாசல் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் சிவன், நவக்கிரகம், கால பைரவர் ஆகிய சன்னிதிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது விசேஷமானது.