தஞ்சாவூர்: ஒரு பக்கம் அக்னி நட்சத்திரம் வறுத்தெடுக்கிறது. இதில் இக்கால இளைஞர்கள் காமெடி, அட்ரா சிட்டி என்ற பெயரில் செய்யும் சில கோமாளிதனங்கள் பிறரது உயிருக்கு உலை வைக்கும் வகையில் உருவாகி விடும் நிலை உள்ளது. அப்படிதான் தஞ்சையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே குளியல் நடத்திய வாலிபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. 


அந்த வகையில் கடந்த 4ம் தேதி தொடங்கி, வருகிற 29ம் தேதி வரை கத்திரி வெயில் காலம் உள்ளது. இதில் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயில் தாக்கம் அதிகம் தெரியவில்லை. ஆனால் கடந்த 4 நாட்களாக கத்திரி வெயில் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் விளாசி எடுத்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதிலும் இயல்பான அளவை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில்தான் இளைஞர் ஒருவர் செய்த அட்ராசிட்டி செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டே முன்புறம் வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு குவளையில் தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டே வாகனத்தை இயக்கி செல்கிறார். இப்படி தஞ்சை பெரிய கோயிலை தாண்டும் வரை வாகனத்தை ஓட்டிக் கொண்டு குளியல் நடத்துவது வீடியோவாக உலா வருகிறது. அதாவது கொளுத்தும் வெயிலை சமாளிக்க இப்படி செய்வதாக வீடியோ எடுத்து வெளியிடப்படடுள்ளது. இதற்கு சம்மர் அட்ரா சிட்டி என்று கேப்ஷன் வேறு.


தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் பெரிய கோயில் வரை உள்ள பகுதிகள் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இதில் இந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை பிரேக செய்து வாகன குளியல் நடத்தியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு பின்னால் வாகனத்தில் வருபவர்கள் மீது தண்ணீர் பட்டு அவர்கள் கவனம் சிதறினால் விபத்துக்கள் ஏற்படும் நிலைதான். மேலும் இவரை பார்த்துக் கொண்டு எதிர்புறம் வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி இருந்தாலும் விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கும். இப்படி உயிருக்கு உலை வைக்கும் விதத்தில் வாகனத்தை ஓட்டிக் கொண்டே குளியல் நடத்திய வாலிபர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் போன்றவற்றில் லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இதுபோன்ற வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.