தஞ்சாவூர்: கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ள தஞ்சை கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் பூங்கா திறப்பது எப்போது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தஞ்சாவூர் அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் கோளரங்கத்துடன் இணைந்த பிரமாண்டமான அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை, திருச்சி, கோவை, வேலூர் போன்ற மாநகரங்களில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் உள்ளதை போன்று, தஞ்சாவூரிலும் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.


இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள அருளானந்த நகரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுடன் கூடிய பூங்காவாக அறிவுத்திறனை வளர்க்க கூடிய வகையில், கணிணி கோட்பாடுகளை உணர்த்தும் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.


விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான ஜி.எஸ்.எல்.வி-க்கு 33 அடி உயரத்திலும், பி.எஸ்.எல்.வி.-க்கு 25 அடி உயரத்திலும் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




திருச்சியில் உள்ள கோளரங்கத்தை விட, மிக அதிநவீன சாதனங்களுடன் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோளரங்கத்தில் டிஜிட்டல் புராஜெக்டர் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதால், காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நட்சத்திரக் கூட்டம், கோள்கள் போன்றவற்றை மிக அருகில் நேரில் பார்ப்பது போன்று இருக்கும்.


இச்சாதனத்தின் மூலம் குழந்தைகள் பார்க்கக்கூடிய அறிவியல் திரைப்படங்கள், ஆவணப் படங்கள் உள்ளிட்டவற்றையும் ஒளிபரப்ப முடியும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 35 பேர் அமர்ந்து பார்க்கலாம்.


குழந்தைகள் தங்களது பாடங்களை விளையாட்டுடன் கற்பதற்காக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ள இப்-பூங்காவின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.


பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அறிவியல் பூங்கா இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் இந்த நேரத்தில் பூங்காவை திறந்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்‌. எனவே இந்த ஸ்டெம்ஸ் பூங்கா எப்போது திறக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


பள்ளி விடுமுறை காலமாக இருப்பதால் தஞ்சாவூருக்கு சுற்றுலாவாக வரும் பிற மாவட்ட, மாநில பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தஞ்சையில் உள்ள இந்த அறிவியல் பூங்காவை காண்பித்து அவர்களின் ஆர்வத்தை உயர்த்தலாம் என்றும் எண்ணுகின்றனர். எனவே இந்த அறிவியல் பூங்காவை உடன் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழ ஆரம்பித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண