கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் குடுகுடுப்பைக்காரரை போல் வேடமிட்டு மேற்கொண்ட கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் தஞ்சை பகுதி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஆங்காங்கே பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும்,  தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களிடம்  மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற அரக்கன் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து பொருளாதார இழப்பை மக்கள் சந்தித்தது போதும். இனிமேலும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் பொதுமக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடந்தது. தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இம்மானுவேல்  என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் குடுகுடுப்பைக்காரர் போல் வேடமணிந்து தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.



அந்த மாணவரின் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குடுகுடுப்பைக்காரர் எப்படி நடந்து கொள்வாரோ அதேபோல் அந்த மாணவன் செய்து காட்டி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் மாணவனை பாராட்டினர்.


மிகுந்த உற்சாகத்துடன் அந்த மாணவர் விழிப்புணர்வை ஏற்படுத்த மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கலந்து கொண்ட டவுன் டி.எஸ்.பி. (பொ) ராஜ்குமார், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் ஆகியோர் மாஸ்க் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பும், அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் ஒன்றையும் வழங்கினர். தொடர்ந்து, மாணவன் இமானுவேலையும் பாராட்டினர். மாஸ்க் அணியாமல் வந்த பொதுமக்கள் மாணவரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கண்டு அருகிலிருந்த கடைகளில் மாஸ்க் வாங்கி அணிந்ததையும் காண முடிந்தது.


இது குறித்து பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி தலைமையாசிரியை சோபியா கூறுகையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் என போலீசார் மாணவர்களைக் கேட்டனர். அதன்படி மூன்று மாணவர்களைத் தேர்வு செய்தோம். இதில் இமானுவேல் சிறப்பாக செயல்பட்டதால், அவர் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இது எங்கள் பள்ளிக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அந்த மாணவனின் செயலை பலரும் பாராட்டி விட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண