கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முனைப்போடு காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை தொடர்ந்து அனுகி வருகிறது. இந்த நிலையில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை அனுமதிக்கக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க கூடாது, தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீரை அபகரிக்க கூடாது, மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்தை அளிக்க கர்நாடக அரசு சதி செய்கிறது, கர்நாடகாவின் சட்டவிரோத வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் மேகதாது அணை அனுமதிக்கான விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை நிராகரித்துள்ள நிலையில், மத்திய அரசு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை திரும்பப் பெறவேண்டும். மறுக்கும் பட்சத்தில் அறிக்கையை நிராகரித்து ஆணைய தலைவர் உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.




இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறுகையில், கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு மத்திய அரசின் துணையோடு சதி செயலில் ஈடுபட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை ஏற்கக்கூடாது என திட்டவட்டமாக மூன்று கூட்டங்களில் மறுத்துள்ளனர். இந்நிலையில,  காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமலேயே சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கர்நாடகம் விண்ணப்பம் செய்திருந்தது. சுற்றுச்சூழல் துறை இன்று கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களிடையே ஒத்த கருத்தை உருவாக்கி ஒப்புதல் பெறாமல் அனுமதி அளிக்க இயலாது என விண்ணப்பத்தை பரிசீலிக்கவே முடியாது என நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. 




இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் நடவடிக்கையை பின்பற்றி  மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திடம் இருந்து திரும்பப் பெற முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஆணைய தலைவர் அதனை நிராகரித்து உத்தரவிட வேண்டும். மேலும் இதுகுறித்து தமிழக அரசின் பிரதிநிதியாக இடம் பெற்றுள்ள கூடுதல் தலைமை செயலாளரும், நீர்வளத்துறை செயலாளருமான  சந்தீப் சக்சேனா உடனடியாக ஆணையத்தில் முறையிட்டு நிராகரிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஜி. வரதராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண