Double Railway Track Project : "கனவு நிறைவேறும் காலம்" தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம்..!
தஞ்சை பெரிய கோயில் அரண்மனை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பள்ளி அக்ரஹாரம் பெருமாள் கோயில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம் என ஏராளமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் முதல் விழுப்புரம் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும் என்று டெல்டா மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதிகளவிலான வர்த்தக போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் இரட்டை ரயில் பாதையை திட்டத்தை உடன் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் அரண்மனை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பள்ளி அக்ரஹாரம் பெருமாள் கோயில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம் என ஏராளமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினம்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தஞ்சாவூர் மாநகரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பயணிகள் அடுத்ததாக கும்பகோணம் பகுதிக்கு தான் செல்கின்றனர். சுற்றுலா மற்றும் மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கும் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகள் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே உள்ளது.
இதனால் கார், பஸ்களில் செல்வதை விட முக்கியமாக சுற்றுலாப் பயணிகள் ரயிலில் பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். தற்போது சென்னையில் இருந்து விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி மார்க்கமாக மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் என தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னல் கிராசிங் பிரச்சினை ஏதும் இல்லாமல் எதில் எதிர் திசைகளில் ரயில்கள் எளிதில் செல்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் இதைத்தான் மிகவும் விரும்புகின்றனர். தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி அதாவது ஒரு ரயில் கிராஸ் ஆகி செல்வதற்காக மற்றொரு ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை இல்லாமல் செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் தாங்கள் விரைவாக செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்ல முடியும் எனவும் விரும்புகின்றனர்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சென்னைக்கும் குறித்த நேரத்தில் வந்து செல்ல முடியும். தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியும் என்பதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் அலை மோதுகிறது.

இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை கலந்து மற்றொரு மார்க்கத்தில் தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் நிறைந்து தான் காணப்படுகிறது. இதில் தஞ்சாவூர் -திருச்சி பொன்மலை இடையே 49 கிலோ மீட்டருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் ரயில்கள் காத்திருக்கும் நிலை இல்லாமல் விரைவாக செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.
ஆனால் விழுப்புரம் இருந்து கடலூர் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் இடையே 40 கிலோமீட்டருக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவில்லை. ஒருவழி பாதையில் ரயில்கள் எதிர் எதிர் திசைகளில் வரும்போது ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் புறப்பட்டு செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் எதிர் திசையில் வரும் ரயிலுக்காக ஸ்டேஷனுக்கு வெளியிலேயே மற்றொரு ரயில் வரும் வரையில் வெகு நேரம் காத்திருக்கும் நிலையும் உள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்யும் முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டாலும் பரவாயில்லை. சில நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனின் அவுட்டரில் ரயில்கள் நிறுத்தப்படுவதால் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒருவழிப்பாதை என்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரையிலான பகுதிகள் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். குறிப்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாகுபடி செய்யப்படும் முந்திரி, பலா போன்றவை வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதேபோல கடலூர் துறைமுகத்தில் இருந்து மத்தி, சீலா, வஞ்சிரம் உட்பட பல்வேறு வகை கடல் மீன்களும் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன. இதேபோல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், வீணைகள், கலைத்தட்டுகள், நாச்சியார்கோவில் விளக்குகள், திருபுவனம் பட்டுப்புடவைகள் என்று ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகமாக உள்ள டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் இரட்டை ரயில் பாதை அமைப்பதால் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இப்பகுதிகள் சுற்றுலாத்தலமாக இருப்பதால் வெளிநாட்டு பயணிகள், வெளிமாநில பயணிகள் என அதிகம்பேர் வருகை தருகின்றனர். இதனாலும் இப்பகுதியை சேர்ந்த வணிக நிறுவனங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். எனவே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டை ரயில் பாதையை உடன் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.