தஞ்சாவூர்: வாழ்க்கையின் அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை காத்திருக்கலாம். காலம் அதனை ஒளித்து வைத்திருக்கலாம். சிலவற்றை சந்தோஷங்களாக. சிலவற்றை சங்கடங்களாக. ஆனால் சங்கடங்களை கூட சாதனைகளாக மாற்றி வெற்றி பெறும் போது தான் உண்மையான ஆச்சரியங்களும், சாதனைப் பதிவுகளும் ஏற்படும்.
கடக்க போகும் பாதை இவ்வளவு பெரிதா என்று எண்ணி வியக்க தேவையே இல்லை.. கடந்து வந்த மிகப் பெரிய பாதையை நினைத்து பாருங்கள். சந்தித்த சவால்களையும் சோதனைகளையும் நினைவில் கொண்டு வந்தால் வெற்றிக்கான தூரம் மிக அருகில் நிற்கும்.
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை நம் மீது வைக்கும் போது தான் வெற்றி நம் வசப்படும். வெற்றிக்கும், தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி. ஆனால் எதையும் கடமைக்கு செய்தால் தோல்வியே மிஞ்சும். கடமையை கடுமை ஆக்கி பாருங்கள் வெற்றி நமதாகும்.
தோல்வியின் தழும்புகள் நினைத்துப் பார்த்து வருந்துவதற்கு அல்ல. வருங்கால வெற்றியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்த தான். அந்த வகையில் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி வர்ஷினி தற்காப்பு கலை, ஓவியம் போன்றவற்றில் பல சாதனைகள் படைத்து விருது மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். இம்மாணவியின் தந்தை புண்ணியமூர்த்தி. டிரைவர், தாய் சுந்தரி. தங்கை நிஷாலினி.
மாணவி வர்ஷினி மாவட்ட அளவில் நடந்த தேக் வாண்டோ போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். அறிவியல் கண்காட்சியில் தனது படைப்பினை சமர்ப்பித்து முதலிடம் பெற்று விருதும், சான்றிதழும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதே போல் மாவட்ட அளவில் நடந்த ஓவியப் போட்டியில் முதலிடம், தொடர்ந்து மூன்று மணி நேரம் ஸ்கிப்பிங் செய்து கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் இன் ஸ்கிப்பிங் சாதனை படைத்துள்ளார். இதற்காக மாணவிக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சுவாமி விவேகானந்தா ஓவியத் திருவிழா போட்டியில் ஓவியத்தில் மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இப்படி தன் பள்ளிக்கு இம்மாணவி பெருமைகள் பல சேர்த்துள்ளார். மாணவி வர்ஷினியின் வெற்றிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை (பொ) செயலட்சுமி கூறுகையில், ஒவ்வொரு மாணவியும் தங்களிடம் தனி திறமைகளை கொண்டு விளங்குகின்றனர்.
அவற்றை சரியான முறையில் கண்டறிந்து பட்டை தீட்டினால் அவர்கள் வைரம் போல் ஜொலித்து பல்வேறு வெற்றிகளை பெற்று பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார்கள். அதுபோல்தான் எங்கள் பள்ளி மாணவிகள் ஓவியம், பேச்சு, நடனம், தற்காப்பு கலை என அனைத்திலும் சிறந்த விளங்கி பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர். மாவட்டம், மண்டலம்| மாநில அளவில் வெற்றிகளை குவித்து எங்கள் அனைவருக்கும் பெருமையை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.