தஞ்சாவூர்: "கோடை உழவு கோடி நன்மை" என்பது பழமொழி. சம்பா அறுவடை முடிந்து தரிசாக உள்ள நிலங்களில் கோடை உழவு செய்வது மிகவும் அவசியமாகும். தற்போதைய மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்று தஞ்சாவூர் வேளாண் உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்



கோடை உழவினால் மேல் மண்ணை கீழாகவும், கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணில் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதனால் அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பாக இருக்கும்.

அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லபடாமல் நிலத்திலேயே மக்கி உரமாக மாறுவதற்கு கோடை உழவு அவசியம் செய்யவேண்டும். மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களும், நம்மால் இடப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வேறு இடங்களுக்கு அரித்து சென்று வீணாவது தடைசெய்யப்படுகிறது.

கோடை உழவு செய்வதால் மண்ணிலுள்ள களைகள் அதிக செலவின்றி அழிக்கப்படுவதோடு. அவையே மக்கி பயிர்களுக்கு உரமாகி நிலத்திற்கு வளம் சேர்க்கிறது. கோடை உழவு செய்த வயலில், மழைநீர் வழிந்தோடி வீணாகாமல், நிலத்திற்குள் உறிஞ்சப்பட்டு, காற்று மண்டலத்திலிருந்து கரைந்து வந்த தழைச்சத்து வயலிலே சேர்க்கப்படுகிறது.

கோடை உழவு செய்யும் போது மண்ணில் மறைந்து வாழும் பூச்சியினங்கள். கூண்டுப்புழுகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் வெளிப்படுத்தப்பட்டு பெருமளவில் கோடை வெப்பதினாலும், பறவைகளினாலும் கட்டுப்படுத்தபடுகிறது. பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான மண்ணில் வாழும் பூசணங்களும், பூசண வித்துக்களும் செலவின்றி அழிக்கப்படுகின்றன. முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்படுவது தவிர்க்கபடுகிறது.

பயிர் பாதுகாப்பு நடைமுறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு என அனைத்தும் செலவின்றி, செயற்கை ரசாயனங்கள் இன்றி கட்டுப்படுத்தப்படுவதால் இரசாயன பின் விளைவுகளான காற்று மாசுபடுவது, தண்ணீர் மாசுபாடு, வேளாண் நிலங்கள் மாசுபடுவது மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.

சாகுபடி பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து பயிர்கள் நன்றாக ஊன்றி நிற்கவும், அதிக கிளைகள், அதிக தூர்கள், அதிக பூக்கள், அதிக மற்றும் தரமான விளைச்சலுக்கு வழிவகையாகிறது. கோடைக்கு பின் பருவ மழையினால் ஏற்படும் மண்அரிப்பு தடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் நீர்மட்டம் திறக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் வயலை தற்போது கோடை உழவு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இதை உடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை உழவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள பகுதியில் சம்பா, தாளடி முடிந்த நிலையில் விவசாயிகள் ஆட்டு கிடை போட்டுள்ளனர். இந்நிலையில் கோடை உழவு மிக முக்கியம் என்பதை வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.