தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழாவை ஒட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது சாரங்கபாணி சுவாமி கோயில். இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம் ஆகும். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு.





இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காணும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒன்பதாம் திருநாளான இன்று வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் மேயர் க. சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன், அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், மாநகராட்சி ஆணையர் ஆர்.லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு தீர்த்தவாரி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை 81 கலச ஸ்தாபன திருமஞ்சனமும், இரவு சாரங்கபாணி சுவாமியுடன் சக்கரபாணி சுவாமி வீதியுலா, சனிக்கிழமை முதல் மே 12ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு பகுதிகளுக்கு எழுந்தருளல், 13ம் தேதி இரவு மணித்தட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்குகளில் சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய 3 சுவாமிகளின் வீதியுலா நடைபெறவுள்ளது.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தேராக கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் சித்திரைத் தேர் போற்றப்படுகிறது. இத்தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையுடையது. தேர் அலங்கார கட்டுமானத்துக்கு பின்பு 450 டன்களாக அதிகரிக்கிறது. ஆசன பீடம் வரை 28 அடி உயரமுள்ள இத்தேர் அலங்காரத்துக்கு பின்னர் 110 அடி உயரத்தை எட்டுகிறது. நான்கு குதிரைகள் உள்ளிட்ட வேலைப்பாடுகள் கொண்ட இத்தேரின் விட்டம் 28 அடி.

இத்தேரில் வியாழக்கிழமை அதிகாலை உபய நாச்சியார்களுடன் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனிடையே, உச்சிபிள்ளையார் கோயில் அருகில் வந்த இத்தேர் உயர் மின் விளக்கு கோபுர கம்பத்தில் மோதியது. இதனால், உயர் மின் விளக்கு கோபுரம் சேதமடைந்ததால், தேரின் ஒரு புறத்தை தேரோட்டிகள் துண்டித்தனர்.

இதையடுத்து, உயர் மின் விளக்கு கோபுரத்தை, இயந்திரம் மூலம் இழுத்து அகற்றி பிடித்துக் கொண்ட பின்னர், அந்த இடத்திலிருந்து தேர் நகர்ந்தது. இதனால் சுமார் 1 மணிநேரம் தேரோட்டம் பாதிக்கப்பட்டது.