தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரை அடுத்த  வேப்பத்தூர், பாகவதபுரம் பூசாரி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஆனந்தவல்லி (60) இவர் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ஆனந்தவல்லி, திருவிடைமருதூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோது பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணம் எடுக்கச் சொல்லி ஏடிஎம் கொடுத்துள்ளார். அந்த நபர் பணம் எடுத்துக் கொடுப்பது போல் தனது ஏடிஎம் கார்டை மாற்றி, கொடுத்து விட்டு, ஆனந்தவல்லியின், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 70 ஆயிரம் பணம் எடுத்து விட்டு, தலைமறைவாகிவிட்டார். பின்னர், தனது செல்லில், பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்ததையடுத்து, வங்கியில் சென்று கேட்ட போது, கார்டை பயன்படுத்தி, பணம் எடுத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தவல்லி, திருவிடைமருதுார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.



  


பின்னர் போலீசார், சிசிடிவி கேமரா பதிவை கண்காணித்தனர். அதில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்தது. திருப்பனந்தாள், திருவிடைமருதூர் பல்வேறு முக்கிய சாலைகளில்  போலீசார்  சிசிடிவி பதிவுகள் கொண்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக, போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சோழபுரம்  சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் சுற்றிக்கொண்டிருப்பது போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.




அதன் பேரில், அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆண்டிமடம், அய்யூரைச் சேர்ந்த மதியழகன் மகன் சிவானந்தம் (22),  தூத்துக்குடி, கருங்கடல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் பீட்டர் பிரபாகரன் (28),  கடலூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (19) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார்  முழுமையாக சோதனை செய்தனர். அவர்களிடம் 17 வங்கி ஏடிஎம் கார்டுகள்  மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்தனர். 




அவர்கள் 3 பேரையும் விசாரணை செய்ததில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சோழபுரம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி பணம் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 3 பேரும், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சோழபுரம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி பணம் திருடியுள்ளனர் என்பது தெரியவந்தது. திருவிடைமருதூர் உட்கோட்ட சோழபுரம் காவல் நிலைய போலீசார்  மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கும்பகோணம் குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.