திருவாரூர் பைபாஸ் சாலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களிலும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்கள் களம் காண உள்ளார்கள். ஊழலற்ற ஒரு ஆட்சியை வழங்க எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களுக்கு 9 மாவட்ட மக்களும் ஆதரவு தரவேண்டும். ஆளுங்கட்சியின் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் இந்த உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக உடன் கூட்டணி வைத்து எஸ்டிபிஐ கட்சி தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தற்போது கஞ்சா விற்பனை என்பது தீவிரமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தமிழகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என காவல்துறை அறிவித்தாலும், பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் தப்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சர்வசாதாரணமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறை தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயமே பிரதான தொழில். இந்த சூழலில் இனிவரும் காலங்களில் நெல் கொள்முதலை மின்னணு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இணையவழி கொள்முதல் என்பது அதனை பயன்படுத்த முடியாத, தெரியாத விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக அரசு பழைய நடைமுறைப்படி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே மீனவர்களின் பிரச்சனையை கலைந்து அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.