தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட காவல் அலுவலகம் பிரிவு சாலையில் ராஹத் பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர் சுமார் 900 பேர் வழக்கில் முன்னேற்றம் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதி ராஹத் தனியார் பஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் கமாலுதீன் என்பவர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ராஹத் பஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை முதலீடு செய்தனர். ஆரம்ப காலக்கட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.10,500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதை தெரிந்து மேலும் பலர் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ராஹத் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பங்கு தொகை வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பஸ் நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். மேலும் தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் ராஹத் பஸ் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கமாலுதீன் மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தங்களின் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கும் அதிகமானோர் புகார் மனுவை அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட காவல் அலுவலகம் பிரிவு சாலையில் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 900 பேர் ஜபருல்லா என்பவர் தலைமையில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து ராஹத் நிறுவனம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை உடன் பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் நடத்த முயன்றனர்.
பஸ் நிறுவனத்தில் முதலீடு.....பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல்...தஞ்சையில் பரபரப்பு..!
என்.நாகராஜன் | 04 Oct 2022 11:56 AM (IST)
தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு.
ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சாலைமறியல் செய்ய முயற்சி
Published at: 04 Oct 2022 11:56 AM (IST)